(கீழ்வரும் வரிகள் கந்த சட்டி கவசத்தின் இசைக்கமைய உருவாக்கப்பட்டுள்ளன)
காப்பு
நேரிசை வெண்பா
பட்டோர்க்கு வலியும்தான், துன்பமும்தான்,-நெஞ்சில்
நினைப்போர்க்கு இதயம் பதைத்து உடல் வேகும்
உயிர் வலிக்கும், அன்று நாம் வாழ்ந்த
அவல வாழ்வுதனை
எமது இடர் தீர உயிர் ஈந்த
உங்களடி நெஞ்சே குறி
காப்பு
நேரிசை வெண்பா
பட்டோர்க்கு வலியும்தான், துன்பமும்தான்,-நெஞ்சில்
நினைப்போர்க்கு இதயம் பதைத்து உடல் வேகும்
உயிர் வலிக்கும், அன்று நாம் வாழ்ந்த
அவல வாழ்வுதனை
குறள் வெண்பா
எமது இடர் தீர உயிர் ஈந்த
உங்களடி நெஞ்சே குறி
வெண்பா
வலிகள் சுமந்தது தமிழரின் வாழ்வுகனவுகள் கலைந்தது இழப்புகளோடு
பட்ட இன்னல்கள் பலபல நூறு
அவற்றினை பாட வார்த்தைகள் ஏது?
போரின் கொடுமையால் குலைந்து போனவர்
உயிரையும் விட்டு மாண்டு போனவர்
நாட்டை விட்டு ஓடி போனவர்
அங்கத்தை இழந்து ஊனம் ஆனவர்
உயிர் மட்டும் எஞ்ச உணர்வுகள் செத்தவர்
உயிருடன் இருந்தும் நடை பிணம் ஆனவர்
எத்தனை வகையினர் எங்களுக்குள்ளே
எப்படி கூற எங்களின் நிலையை
குண்டுகள் விழுந்து திக்குகள் அதிர
அவல குரல்கள் ஓங்கி ஒலிக்க
எங்கும் பிணங்கள் விழுந்து குவிய
வாசல்கள் மூடி எல்லைகள் குறுக
நாளும் பொழுதும் நம்பிக்கை குறைய
நடப்பதை பார்த்து இதயம் பதைக்க
செய்வது அறியாமல் திகைத்து நிற்க
உயிர்மேலிருந்த பற்றும் போக
சிதைந்தன கூடுகள், அழிந்தன குருவிகள்,
அழகிய வாழ்வுகள் அலங்கோலமாகின
பசியின் கொடுமை எங்கும் பரவ
மழலைகள் கூட வாடி கருக
எதுவும் இல்லை எங்களின் கையில்
பசியின் மயக்கம் உணர்வினை தாக்கும்
மழலைகள் விழிகள் ஏங்கி கலங்க
அதனை பார்த்து இதயம் கொதிக்க
கையில் குவளையும் நடையில் தளர்வும்
உள்ளத்தில் ஏக்கமும் உயிர்மேல் பயமும்
கஞ்சி ஊற்றும் கொட்டிலின் முன்னே
பல மைல் தூரம் நீளும் வரிசையில்
நிற்கும் மக்களின் முகங்களில் ஏக்கம்
குண்டுகள் தாக்கும், எறிகணை வீழும்
சிதறல்கள் மழையாய் பறந்து கொட்டும்
அவைகள் தாக்கி உயிர்களும் போகும்
பலவகை குண்டுகள் உயிகளை எடுக்கும்
கஞ்சியும் இன்றி உயிர்களும் போகும்
பசியுடன் வழியை நோக்கி இருக்கும்
அவர்களின் குடும்பம் தேடி தவிக்கும்
பலரிடம் கேட்கும், எங்கும் தேடும்
உடலினை கண்டு அலறி துடிக்கும்
கட்டிய துணையும் பெற்ற வயிறும்
கூட பிறந்த இரத்த உரித்தும்
துவண்டு விழுந்தும் கதறி அழுதும்
அரண்டு புரண்டும் மயங்கி விழுந்தும்
எத்தனை செய்தும் இழப்புகள் தொடரும்
குண்டுகள் வீழ அழிவுகள் கூடும்
மழழைகள், பெண்கள், முதியவர் என்று
வேறு பாடின்றி கணைகள் தாக்கும்
வந்து வந்து குண்டுகள் வந்து
பொழிந்து பொழிந்து மழையென பொழிந்து
எரிந்து எரிந்து எல்லாம் எரிந்து
அழிந்து அழிந்து வளங்களும் அழிந்தது
இரண்டுக்கு ஆறடி பதுங்குகுழி வெட்டி
அதற்கு மேலே தறப்பாள் கட்டி
பற்றைகள் நிறைந்த களிமண் நிலத்திலும்
நாங்கள் வாழ்ந்தது வாழ்வு அல்ல
வரலாற்றில் பதிந்த ஒருபெரும் நிகழ்வு
நிகழ்ந்ததும் ஒன்றும் தற்செயல் அல்ல
திட்டமிட்ட ஒருபெரும் அழிப்பு
பதுங்கு குழிக்குள் குழந்தையும் பிறக்கும்
இறந்த தாயில் பாலையும் தேடும்
மழையின் சாரலும் சோவென கொட்டும்
பதுங்கு குழிக்குள்ளும் நீர்வந்து முட்டும்
இருக்கவும் இயலாது, நிற்கவும் இயலாது
ஓடவும் முடியாது, அசையவும் முடியாது
குண்டுகள் ஒருபுறம், வெள்ள நீர் மறுபுறம்
விரட்டி விரட்டி எங்களை வதைக்கும்
காயம் பட்டவர் கிடந்தது துடிப்பர்
பார்த்து நிற்பவர் பதறி கதறுவர்
கண்ணின் முன்னே உயிரது போகும்
பார்த்து பார்த்து உள்ளம் வேகும்
காயங்கள் பட்டால் மருந்தும் இல்லை
நின்று பார்க்க மனிதரும் இல்லை
இனங்கள் புரியா உணர்வுகள் தோன்றும்
வாழ்க்கையின் மீதே வெறுப்பும் தோன்றும்
இன்னும் ஏக்கங்கள் மனங்களை அழுத்த
பலரின் வாழ்வுகள் இருண்டும் போக
ஊர்களும் அழிந்து சுடுகாடாக
ஏக்கங்கள் மட்டும் எஞ்சி இருக்க
நடைபிணம் போலே எங்களின் வாழ்வு
தட்டி கேட்கவும் இருந்தவர் இல்லை
எட்டி பார்க்கவும் நாடுகள் இல்லை
எங்களுக்கென்று எவரும் இல்லை
விரைவில் எமக்கு விடிவு வேண்டும்
மாண்டவர் கனவுகள் பலித்திட வேண்டும்
பிரிந்தவர் எல்லாம் கூடிட வேண்டும்
வேண்டும் வேண்டும் சுதந்திரம் வேண்டும்
வாழ்வோம், வாழ்வோம், வாழ்வோம் வளமுடன்
உயர்வோம், உயர்வோம் வலுப்பெற்று உயர்வோம்
(உருவாக்கப்பட்ட வரிகளுக்கான மூல இசைவடிவம்)