இன்று அவசர கதியில் விரையும் இந்த ஆடம்பர உலகில் நாம் பார்க்க மறந்த அல்லது பார்க்க விரும்பாத சில பக்கங்களும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையே. எனது முகநூலில் முகம் தெரியாமலேயே நட்பாகி உறவாகிய சில உறவுகளின் நல் எண்ணத்தினால் அவர்களுக்கு வழங்குவதற்காக சில தகவல்களை பெற முயன்றபோது கிடைத்த தரவுகளால் இதயத்தில் சுமையும் வேதனையும் அழுத்தின.
நாம் வாழும் இந்த தமிழ் வளர்த்த மண்ணில் இன்றும் பல சிறார் இல்லங்கள் உதவிகளின்றி கையேந்தும் நிலையில் உள்ளதை பார்க்கும்போது எமது வாழ்வின் அர்த்தங்கள் கூட புரியாமல் போகின்றன. அப்படியானவற்றில் இப்போ அத்தியாவசியமாக உதவிகளை வேண்டி நிற்பது "இனியவாழ்வு இல்லம்" - பார்வை இழந்தவர்கள், கேட்கும் திறன் அற்றவர்கள், பேசமுடியாதவர்கள் என சிறார்களை உள்ளடக்கிய அபூர்வமான இல்லம். மனித நேயம் கலந்த மகத்தான சேவைக்கு இன்னுமொரு சாட்சியாக விளங்கிய இல்லம் இது.
சமூக நலன் கொண்டு 19.09.1997இல் திரு.மாசிலாமணி என்ற விழிப்புலனற்றவரால் இந்த இல்லம் தொடங்கப்பட்டது. கிராமசேவையாளராக இருந்த மாசிலாமணி அவர்கள் தனது சொந்த முயற்சியால் விழிப்புலனற்று, செவிப்புலனற்று, ஆதரவற்று அலைந்த குழந்தைகளை தேடி தனது இல்லத்தில் சேர்த்துவந்தார். ஓலைக்கொட்டில் ஒன்றில் எட்டுப் பிள்ளைகளை சேர்த்துக்கொண்டு அந்த இல்லத்தை அவர் தொடங்கினார். நாளடைவில் "மாற்று வலுவுள்ள" பிள்ளைகள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலம் என்பவற்றை கருதி இனிய வாழ்வு இல்லத்தில் சேர்ந்துகொண்டார்கள். இந்த பிள்ளைகள், எமது சமூகத்தில் தங்களை அடையாளங்காட்டுவது அல்லது அதன் ஓட்டத்தில் எப்படி இணைத்து செல்வது என்ற உபாயங்களை அவர்கள் இனிய வாழ்வு இல்லத்தில் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
இவ்வில்லம் இலங்கையில் வலிந்துதவு சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் கீழ் வடக்கு கிழக்கு சமூக சேவைகள் நலத்துறை திணைக்களம் சார்பாக புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிய மகத்தான இல்லம். இது ஒரு கல்வி நிலையம் மட்டுமல்ல. ஒரு விடுதியும் கூட. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மண்டபங்கள், அலுவலகம் உணவுக்கூடம், கற்கும் மண்டபம், பயிர் தோட்டம், இல்லத்தின் அருகிலேயே சிறார்களின் நலனோம்பல் திட்டமாக கிராமியவிற்பனை நிலையம் என எல்லா வசதிகளையும் தன்னகத்தே கொண்டு இயங்கிய இந்த இல்லம் இன்று தற்காலிக கொட்டகை அமைக்க கூட வழியின்றி எதிர்காலம் புரியாமல் விழித்து நிற்கிறது.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அனுசரணையுடனும் மனிதநேயம் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகள், புலம்பெயர் நிறுனவங்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் போன்ற தரப்பினரின் ஆதரவுடனும் சீரும் சிறப்புமாக இயங்கிய காலத்தில் இங்கு கல்விகற்ற, பராமரிக்கப்பட்ட எட்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலை கழகத்திற்கு தெரிவாகி இல்லத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தினர்.
இங்கு தற்போது இயக்குநராக சேவையாற்றும் திரு.ராஜ்குமார் அவர்கள் யுத்தத்தினால் பார்வை பாதிக்கப்பட்டவர். முன்னர் எறிகணை வீச்சில் ராஜ்குமாரின் தந்தை பலி கொள்ளப்பட்டார். பின்னர் தாயாரும் நோயாளியாக இறந்து போயிருந்தார். அதன் பிறகு வீட்டுக்கு ஒரே பிள்ளையான ராஜ்குமார் ஆதரவற்ற அனாதை சிறுவனாகி விடுகிறார். 5ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு மாடு மேய்க்கும் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் மாடு மேய்க்கும் இடத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அவரது இரண்டு கண்களும் காயத்திற்கு உள்ளாகி பார்வை பாதிக்கப்பட்டு போய்விட்டது. பார்வை பாதித்து இனிய வாழ்வு இல்லத்திற்கு வந்துசேரும் ராஜ்குமார் அந்த இல்லம் அவருக்கு கொடுத்த நம்பிக்கை செறிந்த கல்வியால் சாதாரண தரம், உயர்தரம் என்று படித்து சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். இப்பொழுது அதன் இயக்குநராகி சிதைந்த இல்லத்தை மீள ஒருங்கிணைக்கவும், சிதறுண்ட பிள்ளைகளை மீள இணைக்கவும் தனது பணிகளை தொடங்கியிருக்கிறார்.
வன்னியில் 2009 போரின்போது லட்சக்கணக்கானவர்கள் நிலம் பெயர்ந்து அலையத் தொடங்கிய பொழுது தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அதன் இயக்குநரும் அர்ரம்பிதவருமான மாசிலாமணி அவர்களும் நடக்க தொடங்கினார். அப்பொழுது 150 வரையான பிள்ளைகள் இந்த இல்லத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் சுமந்து கொண்டு அலையத்தொடங்கினார்கள். சில பிள்ளைகளின் கண்களுக்கு அங்கு நடந்த கொடுமையான சண்டைகள், இரத்தங்கள், சதைகள் தெரியாமலிருந்தன. எதுவும் தெரியாமல் அவற்றின் கொடுமையான ஓசைகளை கேட்டபடி அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். சில பிள்ளைகள் குண்டுகளின் சத்தங்கள், ஷெல்களின் சத்தங்கள், அழுகைகள் என்பனவற்றை கேட்காமல் எந்தச் சத்தமுமில்லாது தங்களுக்கும் முன்னால் நடக்கும் கொடுமைகளை பார்த்தபடி அவற்றுக்கு உள்ளாக்கப்பட்டபடி சென்று கொண்டிருந்தார்கள்.
இதுதான் அவர்களின் உலகம்...
இதுதான் அவர்களின் வாழ்வு...
வழியில் காயங்களுக்கும் மரணங்களுக்கும் முகம் கொடுத்தபடி அவர்கள் செல்லுகிறார்கள். அந்த பிள்ளைகளை காத்து வந்த மாசிலாமணி அவர்கள் ஷெல் தாக்குதலினால் பலி கொள்ளப்படுகிறார். பிள்ளைகள் ஆதரவற்று அனாதைகளாகின்றனர். இறுதியில் சமர் மிகத்தீவிரம் அடையும் பொழுது பெற்றோர்களுடன் சில பிள்ளைகளும் தனியாகவே சில பிள்ளைகளுமாக, பிள்ளைகள் எல்லோரும் சிதறியபடி இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் செல்லுகிறார்கள்.
இப்பொழுது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மேலும் பாதிப்புக்களுடன் இழப்புக்களுடன் எங்கெங்கோ இருக்கிறார்கள். அவர்களை இணைத்து மீண்டும் இல்லத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தற்போதைய இயக்குநர் ராஜ்குமார் தொடங்கியிருக்கிறார். சில பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். யாரும் இல்லாதவர்களும் இழப்புக்களை சந்தித்தவர்களும் இப்பொழுது கைதடியில் உள்ள இல்லம் ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். அத்துடன் இங்கிருந்த பழைய பிள்ளைகளை மீள இணைக்க பெற்றோர்கள் தேடி வருகிறார்கள். அவர்களுடன் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இந்த இல்லத்திற்கு புதிதாய் இணைகிறார்கள்.
யுத்தமும் காலமும் இவர்களை பிரித்து இவர்களிடமிருந்த வளங்களை அழித்து விட்டது. இனிய வாழ்வு இல்லப்பிள்ளைகளை காயங்களுக்கு உள்ளாக்கி விட்டது. யாரிடமும் உதவி கேட்காமல் வாழ்ந்திருந்த அவர்களது வாழ்வினை சீரழித்துவிட்டது. மேலும் அங்கங்கள் பாதித்த பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறது. அந்தப்பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைப்பெற்று எதிர்காலத்தை வளம்படுத்த இந்த இல்லம் மீள கட்டமைக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாயிருக்கிறது. இந்த மனிதாபிமான விடயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டியதன் பாரிய பொறுப்பிருக்கிறது.
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் வலிமை எங்களிடமிருப்பதில்லை.
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் ஒளி எங்களிடமிருப்பதில்லை.
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் பாடல் எங்களிடமிருப்பதில்லை.
அந்தப்பிள்ளைகளிடம் இருக்கும் மொழி எங்களிடமிருப்பதில்லை.
அவர்களின் மௌன மொழி எமக்கு புரியாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள்தான் என்பதைக்கூட நாம் உணர முடியாதவர்களல்லவே? அவர்களது உணர்வுகள் எம்முடன் பேசும், எமது உள்ளத்திலும் மனச்சாட்சி சாகதவரை.
இன்று எம் மக்கள் மத்தியில் பல அதீத ஆடம்பர செலவீனங்கள் கௌரவம் என்ற போர்வையில் நடத்தபடுவதை நாம் காண முடிகிறது. இவை வீடுகளில் இடம்பெறும் மங்கல நிகவுகளான பூப்பு நீராட்டு, திருமணம், பிறந்தநாள் போன்றவை தொடக்கம் துயரை வெளிப்படுத்துகின்ற சாவுச்சடங்குகள், பின்பு படையல், எட்டு, முப்பத்தொன்று, ஆண்டுத்திதி என வரையறையின்றி இடம்பெறுகின்றன. அதைவிட ஆலய நிகழ்வுகளிற்கும் தற்போது பெருந்தொகையான பணம் செலவிடப்படுகிறது. இப்படியான ஆடம்பரங்களை மட்டுப்படுத்தி ஒரு பகுதி பணத்தை இப்படியான பெற்றோர் இல்லாத / வறுமையில் வாடுகின்ற / மாற்றுவலுவுள்ள உறவுகளின் வாழ்வு வளம்பெறவும் செலவிடுவோமானால் அதனால் கிடைக்கும் பலன் உயர்வானதே.
அருகில் ஒரு பிள்ளை பசியால் வாடியிருக்க, மழலை ஒன்று எதிர்காலமே கேள்விக்குறியாகி ஏங்கியிருக்க கோடிகளை கொட்டி கோபுரம் அமைப்பதிலும் பலநூறு குடம் பாலில் சிலைகளை குளிப்பாட்டுவதிலும் நிச்சயமாக எந்த பயனும் கிடைக்கபோவதில்லை. ஆயிரங்களை செலவு செய்து சூழல் அமைதியையும் கெடுத்து பக்திப்பாடல்களும் மேளதாளங்களும் முழக்க தேவையில்லை. அமைதியாக மனதினுள் வேண்டிக்கொள்ளுங்கள். இறைவனுக்கு உங்கள் மௌன மொழியே புரியும். அவர் எல்லாம் வல்லவரல்லவா?
தயவு செய்து இவர்கள் பக்கமும் உங்கள் பார்வையை திருப்புங்கள்,
இயன்றவர்கள் இவர்களுக்கு உதவுங்கள்,
இந்த குருத்துகளும் வளர வழிகாட்டுங்கள்,
இவர்களின் வாழ்வை வளப்படுத்தி அவர்கள் புன்னகையில் இறைவனை காணுங்கள்,
கல்லில் மட்டும் இறைவனை தேடும் எங்கள் பாரம்பரியங்களிலிருந்து சற்று விலகி இவர்களையும் பாருங்கள்.
இவர்களையும் எங்கள் உறவுகளாக மதியுங்கள்.
ஒளிமயமான எதிர்காலத்தை இவர்களுக்கு காட்டுங்கள்.
"சிறு துளிகள்தான் பெரு வெள்ளத்தையே உருவாக்குகின்றன"
"சிறு துளிகள்தான் பெரு வெள்ளத்தையே உருவாக்குகின்றன"
தயவுசெய்து இவர்களிற்கு உதவ விரும்பும் உறவுகள் பின்வரும் இனியவாழ்வு இல்ல தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Tel :- +94 21 4922702
Mobile :- +94 77 1102405
Fax :- +94 21 2226566
E.mail :- iniyavalvuillam10@gmail.com
Bank :- Bank of Ceylon , Thirunelvely-Jaffna. A/C No. 70099517
அல்லது மேலதிக விபரங்களிற்கு இப்பதிவின் கீழோ / இப்பக்கதிற்கான முகநூல் பகுதியிலோ உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் உரியவர்களுக்கு தெரியப்படுத்த முடியும்.
-உண்மையுடன் அமர்நாத்.
No comments:
Post a Comment