"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, April 23, 2011

எது தேவை?



உணவின்றி தவித்ததனால்
மருந்தின்றி உயிர் பிரிந்ததனால்

மனங்கள் மரத்ததனால்
இதயங்கள் கனத்ததனால்

உயிரிருந்தும் பிணங்களாக
உணர்விருந்தும் மரங்களாக

ஒதுங்கவும் நிழலின்றி
இருக்கவும் வீடின்றி

முட்களில் நடந்து வேதனைப்பட்டவர்
இருக்க இடமின்றி தெருவில் நின்றவர்

விதியை நோவதா?
சதியை எண்ணுவதா?

எதுவும் புரியாமல்
நடப்பதுவும் தெரியாமல்

மயங்கிய மக்கள் நிம்மதி தேடியிங்கே
மறந்தவர் பலர் மாய வலைகளுடன்

இணையத்தில் இணையற்ற வித்தைகள்
இனமிங்குபடுவது பலவகை துன்பங்கள் 

பாமரமக்களுக்கு புரியாத நடப்புகள்
பாடுகிறார்கள் விதம் விதமாய் விடுப்புகள்

எழுத்திலே சிலிர்க்கிறது வீரம்
படிக்க புல்லரிக்கிறது தேகம்

ஓ, வலிக்கிறது பழைய காயம்
கனக்கிறது இன்னும் இதயம்

தேவையிப்போ பசிக்குணவு
உறங்கியெழுந்திட குடில்

பிள்ளைகளுக்கொரு எதிர்காலம்
தன்னிறைவான வாழ்வாதாரம்

வீரப்பேச்சுகள் பசியைப்போக்காது
உணர்வெழுத்துகள் நிழலையும் தராது

ஏசிக்குளிரில் ஆயிரம் எழுதலாம்
கடல்கடந்திருந்து பலதும் சொல்லலாம்

விழுந்த பலர் எழும்பவேயில்லை
எழும்பி நடக்க சக்தியுமில்லை

அவர்களுக்கு உதவ எவருமில்லை
உதவிகள் செய்ய நினைக்கவுமில்லை

எழுச்சி வரிகளை பின்பு பேசுங்கள்
உதவிக்கரங்களை முதலில் நீட்டுங்கள்

விழுந்துகிடப்பவனுக்கு சொற்பொழிவு தேவையில்லை
வீரமகனை அரவணைக்க ஒருகைதான் வேண்டும்

பட்டவனுக்குத்தான் அதன்வலி தெரியும்
பார்திருப்பவனுக்கு காட்சிதான் தெரியும்

உணர்வுள்ளவன் மௌனமாய் இருக்கிறான்
நிகழ்வினையெண்ணி மனதுக்குள் வேகிறான்,

சிலர் உடல்களைகூட வேகவைக்கிறார்
பலர் துயரழுத்த பார்த்துநிற்கிறார்

மக்களின் நிலையை மறந்திட்ட சிலர்
பேசும் வார்த்தைகள் பெரும் இடர்

மக்களின் மீட்சிக்கு தடையான அடி
கம்பிக்குள் வாழ்பவர்களிற்கு நிரந்தர இடி

சாதனைகள் பல செய்வதாக எண்ணி
செய்யும் செயலோ எமக்கான கண்ணி

வீரமொன்றும் எழுத்தில் வேண்டாம்
மக்களுக்கினி சுமையும் வேண்டாம்

பட்டதிலிருந்து எழுந்திடவேண்டும்
மாற்றுவழிகளில் நிமிர்ந்திடவேண்டும்

நிம்மதியான வாழ்வு வேண்டும்
தென்றல்தவழும் தேசம் வேண்டும்

அவற்றினை கொடுக்க வழியினை தேடுங்கள்
வழிதெரியாவிட்டால் அமைதியை பேணுங்கள்

உழைப்பின் பயன் என்றோ கிடைக்கும்
போகம் பிந்தியும் அறுவடை நிகழும்

அவசரமாக அறுக்க நினைத்தால்
அரைவயிற்றுக்குக்கூட சாப்பிட முடியாது

இதை உணர்ந்து நீங்கள் நடந்தால்
வேதனை எமது வாழ்வில் வராது





வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment