"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, November 26, 2010

பொப்பி மலரும் காந்தள் மலரும்

உலக நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீரர்களை வருடாவருடம்  நெஞ்சினில் நிறுத்தி நினைவுகூர்ந்து வருகிறன. அந்த வகையில் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்துவருகின்றமை தெரிந்ததே.
முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில், ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்துபோக ஆட்சியை அரசு பொறுப்பேற்றது.
அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத்திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள், நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.
சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமான முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில், உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட போர்களில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இன்றுவரை நினைவு கூருகின்றனர்.
அந்த வகையில் நவம்பர் 11ம் திகதி நடைமுறைக்கு வந்த இச்சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் போர்நிறுத்த தினம் -Armistice day- என்றே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர்.
பிரித்தானிய மக்களுக்கு கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்ற நாள். பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பி பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவை சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915ல் எழுதிய  

"Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக்குலுங்கும் பொப்பி பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங்காட்டுகின்றன" என்ற கவிதை வரிகளின் காரணமாகவே பொப்பிப்பூக்களை அந்நாட்டு மக்கள் தங்களின் கல்லறை மலர்களாக தெரிந்தெடுத்திருந்தனர்.


ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்-
“Flanders Fields போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்களை காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம், வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக்கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையை பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயலிழக்கப்போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப்பிடியுங்கள். இறந்துகொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் தொடர்ந்து பூத்துக்குலுங்கும்”.


இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம். இனி இதே கார்திகை மாதத்தில் தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.
இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங்கண்ணிச்செழுங்குடிச்செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.   “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.
“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட்கிழங்கை நட்டு வளர்த்துத்தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.
“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்”  என தெய்வங்களுக்கு காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து போராடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக்கூறுகின்றது.
இப்படிக்கார்த்திகைப்பூவினை பாடாத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.  தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச்சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
"அந்த வகையில் அவர்களிற்கு பொப்பி மலர், எங்களிற்கு காந்தள் (கார்த்திகை) மலர்..."
(தகவல்கள் இணையத்திலிருந்து)
(இதிலுள்ள பொப்பி மலரின் படம் facebookஇல் CoverPhotoஆக பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.)
பொப்பி மலர் தொடர்பான  மேலதிக தகவல்களிற்கு இச்சுட்டியினை பாருங்கள்:-
http://www.vfw.org/Community/Buddy-Poppy/

No comments:

Post a Comment