"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Sunday, February 20, 2011

அன்னைக்காக பாதங்களில் சமர்ப்பணம்...



அம்மா தாயே!
காலையிலேயே மனது கனத்தது,
உடலிருக்க உங்களுயிர் போனதறிந்து,
மாசற்ற திருமகனின் தாயார் நீங்கள்,-அதனால்
அளவற்ற துன்பங்களை சுமந்தவரும் நீங்கள்,
வாழ்ந்த வீடுகூட இன்று கற்குவியலம்மா,
தகரப்பந்தலில் தீருவிலில் வைத்து வணங்கும் நிலையம்மா, 


பிள்ளைப்பாசம் உங்களை சுகங்களை உதறவைத்தது,
தள்ளாத வயதிலும் வட்டுவாகலில் உங்களை நடக்கவைத்தது,
அதிக வேதனைகள் உங்கள் நினைவுகளை தப்பவைத்தது,
நோயின் கரங்களில் உங்களை தள்ளிவிட்டது,
மாற்று இனத்தவரும் பாதம்தொட்டு வணங்கியவர் நீங்கள்,
பெற்ற பிள்ளைகளிடம்கூட போகமுடியாதிருந்தவர் நீங்கள்,


முள்ளிவாய்க்காலில் நீங்களிருந்தது
உங்கள் மகனின் நீதிநெறித்தீர்ப்பு,
நீங்கள் வந்த பாதைகளெல்லாம் வரலாற்றின் பதிப்பு,
அன்பான கணவர் விண்ணுலகம் சென்று
இன்னும் ஆகவேயில்லை ஆண்டு ஒன்று,
அவர் வழி நீங்களும் விரைந்ததிலிருந்து
தெரிகிறது உங்களின் இல்லற அன்பு,


பிள்ளைகளிலிருந்தும் இன்று சிதைமூட்ட அருகிலில்லையம்மா,
ஆனாலும் பிறந்த மண்ணின்காற்று உங்கள் சிதையை தழுவுமம்மா,
அது போதுமம்மா...
உங்களான்மா ஈடேற...
விழிகள் கசிய தலைகள் தாழ்த்தி தருகிறோமம்மா இறுதிவிடை...
வரலாற்றில் நாமெல்லாம் மறைந்திடுவோம், ஆனால் 
நீங்கள் வாழ்வீர்கள் வையகம் உள்ளவரை...



 
புதிய வரிகள் அன்னைக்காக பாதங்களில் சமர்ப்பணம்...


அலை தவழும் கடற்கரையில்
துவண்டு விழும் கொடியினைப்போல்
அன்னையவள் தூங்குகின்றாள் 
பார்த்தீரோ?

அவள் மனம் நிறைய துன்பம் உடன் 
ன் வாழ்வை முடித்துவிட்டு 
விழி மூடி தூங்குகின்றாள் 
பார்த்தீரோ?
விழி மூடி தூங்குகின்றாள் 
பார்த்தீரோ?

(அலை தவழும்…)

அன்புகொண்ட தமிழர்களின் 
நெஞ்சமெல்லாம் துயர் சுமக்க 
விண்ணுலகம் சென்றுவிட்டாள், 
பார்த்தீரோ?
பெற்றவரும் அருகில் இல்லை...
கணவரவரும் மேலுலகில்...
சிதை மூட்ட பிள்ளையில்லை,
பார்த்தீரோ?
சிதை மூட்ட பிள்ளையில்லை,
பார்த்தீரோ?



(அலை தவழும்…)

மருத்துவத்தை பெறுவதற்காய் 
சென்னை வரை வந்தவளை
திருப்பிவிட்ட முதல்வரைத்தான் 
கண்டீரோ?
அவர் மனதிலொரு இரக்கமில்லை,
வரவேற்கும் பண்புமில்லை,
யாரவரை தலைவராக ஏற்றீரோ?
தமிழினத்தின் தலைவரென்றும் சொல்வீரோ?
  
(அலை தவழும்…)

அன்னையவள் தூங்கிவிட்டாள்,
விண்ணுலகம் சென்றுவிட்டாள், 
சோதரரே பூத்தூவ வாரீரோ?

அவள் பூவுடலில் தீயை இட்டு 
பூவுலகில் விடைகொடுக்க 
அன்னையரே, தந்தையரே வாரீரோ?
அன்னையரே, தந்தையரே வாரீரோ?

(அலை தவழும்…)


மாற்றிய பாடலுக்கான உண்மையான வரி வடிவம் 
ஆயர்பாடி மாளிகையில்
தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான்
ஆராரோ
(ஆயர்பாடி…)

பின்னலிட்ட கோபியரின்
கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல்
லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா
ஆராரோ
(ஆயர்பாடி…)

நாகப்படம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான்
தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி…)

கண்ணனவன் தூங்கிவிட்டால்
காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும்
போதை முத்தம் பெறுவதற்க்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி…)

ஒலி, ஒளி வடிவம் 





This free script provided by
JavaScript Kit

Wednesday, February 16, 2011

மீள் மாற்றம் (Remix)-1


புதிய முயற்சி...
திரைப்பாடல்களின் வரிகளை மாற்றும் ஒரு முயற்சி...


வரிவடிவம் 
 
பாடல் : ஏலேலங்கிளியே
திரைப் படம் : நான் பேச நினைப்பதெல்லாம்
பாடியவர் :  மனோ
இசை: சிற்பி

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக்கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே 
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

சோலைக்குயில் தேடி என்னை பார்க்க வந்துவிடும் 
ஒரு பாடல் கேட்டுவரும்
ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித்தரும்
எந்தன் தாகம் தீர்த்துவிடும்
நானா பாடுற பாட்டு அந்த தென்றலும் அதை கேட்டு
நானா பாடுற பாட்டு அந்த தென்றலும் அதை கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும், நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும், நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப்பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா?
நல்ல சேதி சொல்லட்டுமா?
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா?
வெற்றி முத்தை அள்ளட்டுமா?
ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும், நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும், நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக்கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே 
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே 

ஏலேலங்கிளியே
 என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே

ஒலி, ஒளி வடிவம்
 


புதிய வரிகள்.

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை

நீ சுற்றித்திரிவது,  அத பார்க்க கொதிக்குது 
உன் நிலையை எண்ணி மனது வெம்புது 
எந்தன் உள்ளம் விம்மி வெடிக்குது

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை

செய்ய பல வேலையிருந்தும் சோம்பி இருப்பதா?
நீ தெருவில் சுற்றுவதா?
உன் அன்னை மண்ணை விட்டு நீயும் வெளியில் ஓடுவதா?
மண் பாழ்பட்டு போவதா?
எப்படி இது நியாயம்? என் உள்ளம் எல்லாம் காயம்,
எப்படி இது நியாயம்? என் உள்ளம் எல்லாம் காயம்,
நீங்க இப்படி ஓடினா, நாடு எப்படி முன்னேறும்டா?
நீங்க இப்படி ஓடினா, நாடு எப்படி முன்னேறும்டா?

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 

உந்தன் நாடு, பண்பாடெல்லாம் மறந்து போவதா?
அதை ஒதுக்கிவிடுவதா?
அந்நிய நாட்டில் அகதி என்று  பெயரும் கேட்பதா?
அடிமை வாழ்வும் வாழ்வதா?
எம்நாடு இருக்கு வாழ, வளங்கள் இருக்கு நிறைய,
எம்நாடு இருக்கு வாழ, வளங்கள் இருக்கு நிறைய,
ஏன் ஓடுறாய் மண்ணை விட்டு? பெற்றோரையும் தனிக்கவிட்டு?
ஏன் ஓடுறாய் மண்ணை விட்டு? பெற்றோரையும் தனிக்கவிட்டு?

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 

நீ சுற்றித்திரிவது,  அத பார்க்க கொதிக்குது 
உன் நிலையை எண்ணி மனது வெம்புது 
எந்தன் உள்ளம் விம்மி வெடிக்குது

சுற்றிவரும் பூமி, 
அது எப்போதும் நின்றதில்ல 
எந்த நாளுமே இயங்க மறுக்கல
அது தன்னலம் பார்த்து சுற்றி வந்ததில்லை 





This free script provided by
JavaScript Kit

Monday, February 14, 2011

இதெல்லாம் எதற்காக?



குடாநாடு கிடக்கிற கிடையில...
அதிகளவிலான மனவெழுச்சிகளுக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவ வயதினரில் கிரகப்பிரவேசம் செய்கின்ற காதல், கத்தி நிலையை ஒத்திருக்கிறது. கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். அது கத்தியை கையாளுகின்ற நபரின் புத்தியில்தான் தங்கியிருக்கின்றது.
 நாளைக்குக் காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதல் காய்ச்சல் பீடித்தவர்கள் நாளைய தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். விடுதிகள் (hotels), பூங்காக்கள், கடற்கரைகள் மாத்திரமன்றி அச்சு, மின்னியல் ஊடகங்கள் கூட நாளைய நாளை சிறப்பிக்கத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ரோஜாப் பூ விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள் என அனைவரும் காதலர் தினத்தையொட்டி ஒரு கை பார்த்துவிடுவதென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் இப்படியென்றால் இந்தத் தினத்தின் கதாநாயகர்களாக விளங்கும் இளைய பதின்ம வயதினர் இன்னும் பலத்த "டென்ஷ"னோடு நாளைய புலர்விற்காகக் காத்திருக்கின்றார்கள்.நாளைக்குக் காதல்கள் பரிமாறப்பட இருக்கின்றன.
"நாங்கள் என்ன குறைஞ்ச ஆக்களோ'' எனும் விதத்தில் யாழ்ப்பாண இளைய சமுதாயமும் தமது வித்துவத்தைக் காட்ட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நாளைக்குக் காலை குடாநாட்டு வீதிகளில் வலம் வந்தீர்களேயானால், உங்கள் வாகன "டயரி"ல் மிதிபடுகிற மாதிரி வாழ்த்தோ கவிதையோ வரையப்பட்டுக் காணப்படலாம். நாளைய தினத்தைச் சிறப்பிக்கிறவர்களின் ஆங்கில முதலெழுத்துக்கள் கூட அழகாக எழுதப்பட்டு (கவனம் அது உங்கள் மகளுடைய அல்லது மகனுடையதாகக் கூட இருக்கலாம்) உங்கள் மிதியடி ஆசீர்வாதத்திற்காக காத்துக் கொண்டிருப்பதை நீங்கள் அனுபவிக்கலாம்.இத்தகைய அரிய, பெரிய காரியத்தைச் செய்வதற்காக நமது இளைய சமுதாயம் இன்றிரவு தீந்தை (paintட்) வாளிகளுடன் வசந்தம் வீசத் தவறிய வீதிகள் தோறும் அலைந்து தமது கைங்கரியத்தைக் காட்ட இருக்கிறது. போதாக்குறைக்கு வீட்டு மதில்கள், கைவிடப்பட்ட கட்டடச்சுவர்கள், மின்சாரக் கம்பங்கள் என்பவற்றிலும்  உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு முந்தி  ஏதாவது கருமம் நாளைக்கு அரங்கேறியிருக்கும். பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றிலெல்லாம் நாளைக்கு ஏதாவது "நரித்தனம்" நடைபெறாமல் விடாது என்றே நம்பப்படுகின்றது
.
காதல் உணர்வுகளுக்குள் ஓர் உணர்வாகப் புகுந்து நின்று உவகையும் தருகின்றது. ரகளையும் செய்கின்றது. அது இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம் என்று எல்லாவற்றினுள்ளும் வேர் நுழைத்து விழுது பரப்பி நிற்பதனால்தான், அதனுடைய அடிமுடி தேடுவது பெருத்த காரியமாகிப் போய்விட்டது.
வலன்ரைன் என்கிற சோகம் காதலர் தினம் என்று சிறப்பிக்கப்படும் "வலன்ஸ் டைன்ஸ் டே" எப்படி உருவானது?
"வலன்ரைன்" எனும் கிறிஸ்தவ மதகுருவை நினைவுகூரும் நாளாகவே இது அமைகிறது. உரோம சாம்ராஜ்ஜியத்தை கிளாடியஸ் ii ஆட்சி செய்த காலத்தில், திருமணமாகாத ஆண்கள் சிறந்த படைவீரர்களாக இருப்பதைக் கண்டார். எனவே இளம் ஆண்கள் திருமண பந்தத்தில் இணையக் கூடாதென சட்டம் பிறப்பித்தார். அக்காலத்தில் அங்கிருந்த இந்த "வலன்ரைன்" பாதிரியார் அரசனின் இந்த நிபந்தனையால் கவலையுற்று படை வீரர்களுக்குத் திருமணங்களை இரகசியமாக நடத்தி வைத்தார். எனினும் இவர் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். அப்பேர்ப்பட்ட அவலத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தினம்தான் நாளைக்கு அகக்களிப்புடன் கொண்டாடப்பட இருக்கின்றது.மேற்குலகு சார்ந்த இந்தத் தினம், படிப்படியாக நமது கீழைத்தேய நாடுகளுக்கும் பரவி ஏதோ முக்கியமான ஒரு தினத்தைக் கடைப்பிடிப்பது போல பரபரப்புடன் பின்பற்றப்பட்டு வருகின்றது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எதிர்காலத்தில் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கவும் என ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள பல சர்வதேச தினங்கள் இன்று கண்டுகொள்ளப்படாமலே இருக்கின்றன.


மறக்கப்பட்ட தினங்கள்
ஐப்பசி 16இல் அறிவிக்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தையோ, கார்த்திகை 16இல் நினைவு கூரப்படும் சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினத்தையோ கார்த்திகை 25இல் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தையோ இன்று எவரும் கண்டுகொண்டதாகத் தகவல் கிடையாது. என்று அத்தினமோ, அன்றைய தினத்தில் மாத்திரம் பத்திரிகையில் ஒரு கட்டுரை, வானொலி செய்தியில் ஒரு தொகுப்பு, ஒரு பேரணி, ஒரு சுவரொட்டி என அன்றே நினைவு கூரப்பட்டு அன்றே மறக்கப்பட்டு விடுகின்ற தினங்களாகவே இவை இருக்கின்றன. அத்தகைய தினங்களில் சில எங்களைப் பற்றியவையாகவும் கட்டாயம் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், நாம் அவற்றைப் பற்றிக் கவலையேபடுவதில்லை. காதலைப் பற்றிக் குறிப்பிடுவது இபத்தியின் நோக்கமன்று ஆதலால் நீங்கள் காதலைப் பற்றி தெரியாதவராக இருந்தால்(?) இன்றைய, நாளைய பத்திரிகைகளில் வருகின்ற கவிதைப் பகுதியை பார்த்தோ அல்லது தொலைக்காட்சி வானொலி என்பவற்றை முடுக்கிவிட்டோ காதல் பற்றிய அறிவை (?) வளர்த்துக் கொள்ளலாம்.
அதிகளவிலான மனவெழுச்சிகளுக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவவயதினரில் கிரகப்பிரவேசம் செய்கின்ற காதல், கத்தி நிலையை ஒத்திருக்கிறது. கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். அது கத்தியை கையாளுகின்ற நபரின் புத்தியில்தான் தங்கியிருக்கின்றது
.
நன்மையா? தீமையா?
காதலினால் நன்மை விளைந்தால் (?) உண்மையில் அது வரவேற்கத்தக்கது. மாத்திரமன்றி அதுவே அதன் சுபாவம் என்று கூறி ஒதுக்கிவிடலாம். ஆனால் தீமை விளைந்தால்...(?)
குடாநாட்டு இளம் வயதினரின் இன்றைய நிலை, எவராலும் திருப்தி அடையக்கூடிய வகையில் இல்லை. அதற்கு வலுசேர்க்குமாப்போல் அண்மையில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வெளியிட்ட அறிக்கை தாங்கிவந்த விடயங்கள் குடாநாடு குட்டிச்சுவராகிப் போவதை எண்பித்து நிற்கின்றன.
18 வயதிற்கு கீழ்ப்பட்ட, 247 பேர் கர்ப்பம் தரித்திருக்கின்றனர். 54 பேர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 14 பேர் திருமணம் செய்யாமலே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். உடல் ரீதியான துஷ்பிரயோகத்தினால் 11 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்கழி 31 ஆம் திகதி வரையிலாக உள்ள தகவல்களை வைத்து மேற்படி அறிக்கை வெளிப்படுத் தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மாத்திரமன்று, நாளாந்த நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கின்ற பல சம்பவங்களும் கூட ,யாழின் இளைய சமுதாயம் பற்றிய பெருத்த கேள்வியை எழுப்புகின்றன.இன்றைக்கு வீதிகளில் இறங்கினோமானால்   சில காலங்களுக்கு முன்பு இராணுவ வாகன தொடரணி போனதை ஞாபகமூட்டுமாப்போல் மோட்டார் சைக்கிள் இளைஞர்களின் சவாரிப் பாய்ச்சலையே காணக் கிடைக்கிறது. அதிலும் தலைக்கவசம் அணியாத தலைகளும் உள்ளடக்கம். சரி அப்படி அணிந்திருந்தாலும் அதனுள் செல்லிடப்பேசி ஒன்று செருகிவைக்கப்பட்டிருப்பதும் பிரயாணத்தின்போது சுவாரஸ்யமாக அனுபவிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.


இளசுகளின் தான்தோன்றித்தனம்
தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டி விபத்துச்சார்ந்த அதுவும் குடாநாட்டுப் பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் விபத்துச் செய்திகளை வாசித்து பார்த்தீர்களானால், அதில் அடைப்புக்குறிக்குள் பாதிக்கப்பட்டவரின் வயதைக் குறிப்பிட்டிருப்பார்கள் அல்லவா? அந்த வயதுப் பெறுமானம் 18 தொடக்கம் 30 வரைக்கும் பரவலாகக் காணப்படும்.எங்காவது திருடர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டதாகவோ பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டதாகவோ செய்தி இருக்கிறதா, அடைப்புக்குறிக்குள் மேற்சொன்ன வயதுப் பெறுமானம் காணப்படும்.மாலை மயங்கும் நேரத்தில் குடாநாட்டு நகர்ப்புற மதுபானக் கடைகளை நோட்டம் விட்டுப் பாருங்கள். நல்லூர் திருவிழாவின்  சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் வரிசையாக நெருக்கி சைக்கிள்களை அடுக்கி வைத்திருப்பது போல சைக்கிள்களும், மோட்டார் சைக்கிள்களும் தொகையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை வைத்தே உள்ளே உள்ள திருவிழா நெருக்கடியை ஊகித்துக்கொள்ளலாம். தென்பகுதியிலிருந்து வந்த சிங்களச் சுற்றுலாப் பிரயாணிகளா இதில் ஈடுபடுகிறார்கள்? இல்லை. யாழ்ப்பாண இளைய சமுதாயமென யாரை மேலே இனங் காட்டினேமோ அவர்களே இவர்கள்.
பொது இடங்களில் கூடிநின்று தெருவில் போகின்ற பெண்களை சில்மிசம் செய்கின்ற இளைய சமுதாயத்தின் கொட்டத்தை அடக்குவதற்குப் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு யாழ். சமூகம் ஆளாகியிருக்கின்றமையையிட்டு வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கின்றது.

யுவதிகளின் போக்கு
இளைஞர்கள் இப்படியென்றால் யுவதிகள்..?
நாகரீகமான ஆடைகளுடன் ஆலயங்களில் வழிபடவருமாறு விநயமாக வேண்டுகோள் விடுக்கவேண்டிய தேவை இன்று ஆலய நிர்வாகங்களுக்கு அவசியமானதாகிப் போய்விட்டது. திரைப்படப் படக் காட்சிக்குப் பயன்படுத்திய சிக்கன
கலாசார(?) ஆடைகள் மாதிரியைப் (மொடல்) பின்பற்றி, துச்சாதனன் இன்றித் தம்மைத் தாமே துகிலுரியும் மாதர், இன்று நம்மத்தியில் பரவலாக உள்ளனர். அதுவும் தேவாலயங்களில் நிலைமை மோசமடைவதால், ஆலய பலிபீடத்தில் நின்று குருவானவர் அபாய சங்கு ஊதவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவின் ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில் தாராளமாகவே கடை விரித்திருக்கிறது. திரையிலும் தொலைக்காட்சியிலும் வந்துபோன தென்னிந்திய திரைப்பட கதாநாயகர்கள் இப்போது கிராமப் புறங்களிலும் தெருக்களிலும் சந்திகளிலும் மறுபிறவி எடுத்திருக்கின்றனர் என்று அன்பர் ஒருவர் கூறியது ஏறக்குறைய சரியாகத்தான் இருக்கிறது. இன்றைய இளந் தலைமுறையினரின் நெற்றியில் திருநீறைக் காண்பதென்பது அபூர்வ நிகழ்வாக மாறிவிட்டது.அரசினால் தேசிய மட்டத்தில் நடத்தப்படுகின்ற தரம் 5, க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் முதலிடங்களை அலங்கரித்த காலம்போய், முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தையேனும் அலங்கரிப்பதற்கு இன்று படாதபாடு படவேண்டியிருக்கின்றது. அதுகூட இன்று எட்டாக்கனி என்கிற நிலையை எட்டியிருக்கின்றோம்.
யுத்தம் பிரசவித்துச் சென்றுள்ள அதிகளவான விதவைகள் குறித்து அதிலும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பற்றிச் சமூகத்தில் தோன்றும் விழிப்புணர்வு வெறும் பூச்சியமாகவே இருக்கிறது. இவர்கள் அரசின் கைகளை எதிர்பார்க்கின்ற நிலையே நிலவுகின்றது. இவர்களின் மறுவாழ்வு குறித்து இன்றைய இளைய சமுதாயம் கிஞ்சித்தும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.
சட்டவிரோதக் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்கின்ற காதல்கள் இன்று சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. மறுபுறத்தில் இளவயது விவாகரத்துக்கள் பெருகிவருவதாக சமுதாய அனுதாபிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பத்தியில் இளைய சமுதாயத்தினர் என விளித்திருப்பது வேறு எவரையுமல்லர். உங்கள் பிள்ளைகளைத்தான், அல்லது உங்கள் சகோதர சகோதரிகளைத்தான், அல்லது..? உங்களைத்தான்.

விழிப்புணர்வு நாளே சிறந்தது
குடாநாட்டுக் குற்றச் செல்கள் பற்றிப் பிரதமர் தி.மு.ஜயரட்ன "யானை வால் மயிர் உதிர்விற்குச் சமன்'' என எமது பிரச்சினையை மலிவாகச் சொல்லி விட்டார் என அறியும் பொழுது எமக்குப் பொத்துக் கொண்டு கோபம் வருகின்றது. ஆனால் நாம் அவரிலும் விட மோசமான கவனயீனத்துடன் இருக்கிறோம். குடாநாட்டு இளையோர் விவகாரம் இந்த நிலையில் இருக்கையிலேயே நாளைக்கு நாம் காதலர் தினத்தைக் கொண்டாட(?) இருக்கிறோம்.
குடாநாட்டின் நடைமுறைச் சூழ்நிலையில் ஒவ்வொருநாள் விடிகாலையிலும் வீட்டிற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணறுகளுக்குச் சென்று காணாமற்போனோர் சடலமாகத் தன்னும் மிதக்கிறார்களோ என்று பார்க்கவேண்டிய பரிதாப நிலையில், நாளைய தினத்தை காதலை வெளிப்படுத்துவது, உள்வாங்குவது போன்ற பாரம்பரிய நடைமுறைகளுடன் கொண்டாடாமல், இளைய சமுதாயம் பற்றி விழிப்புணர்வு நாளாக அனுஷ்டிப்பதே சாலச் சிறந்தது மாத்திரமல்ல காலத்தின் தேவையுமாகும்.

(உதயன் நாளிதழில் 13 /02 /2011 அன்று பிரசுரமான பதிவு)
           








This free script provided by

Tuesday, February 1, 2011

தவிக்கிறாள் தமிழன்னை


எனது முகநூலில் தமிழ் பித்தனென்று எழுதிய தமிழா(?),
அன்றுடன் நீக்கினேன் உன் நட்பை, அதனால் 
நீ பின்னர் பார்திருக்கமாட்டாய் என் பதிவுகளை. ஆனால் 
நீ பார்ப்பாய் இந்த வலைப்பதிவை, அதனால் 
உனக்கும் சேர்த்துத்தான் சில வரிகள் இதில்.
தமிழ் வாழவேண்டுமென்று தாம் அழிந்துபோனவர்கள் பல்லாயிரம்பேர்,
தமிழ் உயர வேண்டுமென்று தாம் புதைந்த அவர்கள் முன் 
நான் சிறு துரும்பு,
எனது முகநூலில் சிங்கள நண்பர்களும் சிலருண்டு,
தமிழை நேசிப்பதால்தான் 
அவர்கள் நட்பையும் நேசிக்க முடிகிறது, 
அவர்களின் உணர்வும் புரிகிறது, 
அவர்களின் மனிதம் தெரிகிறது, 
தமிழில் பதிவுகளை வெளியிடும் என்னுடன்
அவர்கள் நட்பும் தொடர்கிறது.
இன்று உலகில் எங்கும் பரந்து வாழும் தமிழா,
நீ பேசுவது தமிழா?
ஏன் கெடுக்கின்றாய் அன்னைத்தமிழை?
உனது தாய் மொழியின் பெருமை உனக்குத்தெரியுமா?
அதன் இனிமை உனக்கு புரியுமா?
கல்வெட்டிலும் உள்ளது உன் தாய் மொழி,
ஏட்டிலும் உள்ளது வரிவடிவம், அதன் 
இனிமையை கெடுத்து பெருமையை குலைப்பதுதான் நாகரிகமா?
இரண்டு நிமிடம் உன் தாய்த்தமிழில் உரையாட நீ தடுமாறுகிறாய்.
அந்நிய மொழியினை அள்ளிக்கலக்கிறாய். கை காட்டி
Hi என்று தொடங்குகிறாய்.
So, So என்று கொட்டுகிறாய்.
உன் மூதாதையர் கோழி கலைத்த மொழியது,
காகம் விரட்டிய சொல்லது, 
தமிழில் இருக்கிறது கை கூப்பி பணிவாய் ஒரு வணக்கம்.
ஏன் மறந்தாய் அதை?

தமிழராய் பிறந்து இன்று அறிவிப்பாளர்களாய் உள்ளவர்களே,
அந்தோ பரிதாபம்.
உங்கள் வாயில் சிக்கித்தவிக்கிறாள் தமிழன்னை.
பிரான்ஸ் வானொலியில் பிரெஞ்சில் பேசுகிறார்கள்,
ஜப்பான் வானொலியில் ஜப்பான் மொழியில் பேசுகிறார்கள்,
ஜெர்மன் வானொலியிலும் அவர்கள் மொழியையே பேசுகிறார்கள்.
நீங்கள் மட்டுமேன் தமிங்கிலத்தில் பேசுகிறீர்கள்?
தமிழன்னையை நீங்கள் வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை,
வுசெய்து சாகடிக்காதீர்...


மூத்த அறிவிப்பாளர்,
முதுபெரும் அனுபவசாலி,
பல்லாயிரம் மேடைகளை பாங்குடன் கண்டவர்,
கணீர் குரலில் தமிழிற்கு பெருமை சேர்த்தவர்,
சிம்மக்குரலோன் B.H.அப்துல் ஹமீட்.
தொட்டுவணங்குகிறேன் அவர் பாதங்களை மனதில்,
நெஞ்சிருத்தி போற்றுகிறேன் அவர் திறமையை என்றும்,
பாருங்கள் அவர் அறிவிப்பை,
கேளுங்கள் தூயதமிழின் இனிமையை,
Hi என்று தொடங்கியதுமில்லை,
Bye என்று முடித்ததுமில்லை.
So, So என்று பொழிந்ததுமில்லை,
தேன்மதுரத்தமிழ் எப்படி விளையாடுகிறது அவர் பேச்சில்?
திக்கெட்டும் புகழ் சேர்த்த தமிழ் எப்படி இனிக்கிறது அவர் குரலில்?
அப்படி உம்மால் முடியாவிட்டலும் பரவாயில்லை.
உங்கள் பேச்சில் கலக்காதீர் வேற்று மொழியை,
தமிழன்னை துன்புறுகிறாள்.
அழகுத்தமிழில் பல்லாயிரம் சொற்களிருக்கின்றன,
எதையும் விரிவாய் எடுத்து கூறுவதற்கு.
அகராதியை புரட்டிப்பார், அது உனக்கே புரியும்.
ஆங்கில ஒரு வார்த்தைக்கு பல பொருள் தமிழில் இருக்கும்.
ஆங்கிலேயன் அடிமையாக்கி ஆண்டான் உலக நாடுகளை,
பொது மொழியாகியது அவர்களது ஆங்கிலம்.
ஆண்ட பரம்பரை அடியுண்டு விழுந்தது பாதாளத்தில்,
அநாதை மொழியாகியது அன்னைத்தமிழ்.
ஆனாலும் உன் மொழி செம்மொழி,
தமிழகத்து தாத்தா கூட இப்போதான் விளித்திருக்கிறார்,
ஆனால் தமிழின் பெருமையை கிளி.இல் உலகமே பார்த்தது,
வியந்தது...
தமிழினி மெல்லச்சாகும் என்றான் பாரதி.
அதை பொய்யாக்கி உயர்ந்தது, ஆனால் 
இன்று அவன்கூற்று மெய்ப்படும் நிலையில்,

தமிழன் என்பதற்கு வெட்கப்படும் நீ வரலாற்றை புரட்டிப்பார்.
தமிழை விரும்பி தமிழ்நாட்டில் 
தமிழருடன் வாழ்ந்த ஆங்கிலேயர்களையும் அறிவாய்.
தூய தமிழில் ஏழு சொற்களால் இவ்விரண்டு வரிகளாக 
1330 குறள்களில் உலகின் தத்துவத்தையே அடக்கியவன் வள்ளுவன்,
வள்ளுவன் குலில் சொல்லாதது எதுவுமில்லை.
அப்படியான ஒரு நூல் உலகில் வேறுமில்லை. அதனால்தான் 
அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையும் 
தூயதமிழ் திருக்குறளுக்குண்டு.
நீ ஒன்றும் குறள்களை மனனம் செய்யவேண்டாம்,
உன் சந்ததிக்கு பொருளுடன் சொல்லிக்கொடு,
அது போதும் அவர்களின் சீரான வாழ்விற்கு.
உணவுடன் அன்னைத்தமிழையும் சேர்த்தூட்டு உன் மழலைக்கு,
சேக்ஸ்பியரும்  ஹரிபோட்டரும் ல்ல உன் இலக்கியம்.
அகநானூறும் புறநானூறும் அரிய வடிவில் 
இருக்கிறது தமிழில்.
அருமையான ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளன,
அறிய வேண்டியவை அவை.
பொழுது போக்கிற்கும் கதைகள் தேவையில்லை உனக்கு.
ஆனையை அடக்கிய அரியாத்தை, மாவீரன் பண்டாரவன்னியன் என 
பல வரலாறுகளே இருக்கின்றன.
கட்டப்பொம்மன், பகத் சிங் என நீண்டவை அவை.
முழுதாய் அறிய ஆயுளும் போதாது.
கற்றுக்கொடு அவற்றை, கொஞ்சம் பொறு,
நீ முதலில் கற்றுக்கொள், அப்போதுதான் 
கற்றுக்கொடுப்பது உன்னால் முடியும்.
மண் பற்றும் உன்னை பற்றி கொள்ளும்,
மொழிப்பற்றும் தானாய் வரும், அதன்பின் 
புரிந்துகொள்வான் உன் பிள்ளை உலக வாழ்வை,
உணர்ந்துகொள்வான் தன் அகதி நிலையை,
அறிந்துகொள்வான் தன் அன்னைத்தமிழ் அழகை,
பார்க்கத்துடிப்பான் தன் தாய் நிலத்தை,
நேசிக்க கற்றுக்கொள்வான் தன் வரலாற்றை,


ஆங்கிலம் உனக்கு பெருமை தரலாம். நீ வசிக்கும் நாட்டு 
மொழி உனக்கு தொழிலை தரலாம். ஆனால்
உன் தாய் மொழிதான் உனக்கு அடையாளம்.
பெற்ற தாயை ஒதுக்கிவிட்டு மாற்றான் தாயை தூக்கி 
தாயென்று சுமக்க எப்படி முடிகிறது உன்னால்?
தமிழ் தெரியாவிட்டாலும் உன் பிள்ளை நிறத்தால் தமிழன்தான்.
அவனின் நிலைதான் நாளை பரிதாபம்.
அந்நிய நாட்டிலவன் தாய் மொழி தெரியா தமிழனாய்...
ஊர் பெருமையறியா பிள்ளையாய்...
மூன்றாம் உலகப்போர் மூண்டால் தெரியும் உன் நிலை என்னவென்று,


பிறந்த உன் மண் வாசம் 
எப்படி மக்கிறது உனக்கு?
அதைவிட துயரம், இடையிடையே எட்டி பார்க்கும்போது
உன் மண் வாசம் உனக்கு Bad smellஆக தெரிகிறதே?
புழுதி மண்ணில் நீர் விழுந்து மண் மணக்கும் வாசம் 
உனக்கு Bad smell
கிணற்று தண்ணீர் உனக்கு ஒவ்வாமையாக  இருக்கிறது,
சுடுநீர் கேட்கிறது, ஆனால்
அரைகுறை ஆடையுடன் நீராடி படம்பிடிக்க
கசூரினாக்கடல் உனக்கு ஒத்துவருகிறதே? 


ஓ.............. தாங்க முடியவில்லை உன் மாற்றம் எமக்கு,
அமைதியாய் அந்த சுவாசத்தை உள்ளே இழுத்துப்பார்,
நீ மறந்த பல கதைகளை அது பேசும்,
நீ பார்க்காத பல காட்சிகளை அது கூறும்,
தமிழ்த்தாயின் வாசமது,
அவளின் உணர்வு மொழியது,


இத்தனையுமேன்? நன்றியே மறந்துவிட்டாய் தமிழா,
Thanksதானே உனக்கு கூறத்தோன்றுகிறது...


இவற்றை படிக்கும் தமிழா, 
உனக்கு பொருந்தாததை எழுதிவிட்டேன் என்று 
கோபம் பொங்குகிறதா என்மேல்?
உணர்ச்சி கொப்பளிக்கிறதா?
உனக்கு பொருந்தாவிட்டால் விட்டுவிடு,
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டுமென்று 
வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்கள் பரம்பரையில் வந்தவன் நான்.
அதனால்தான் இப்படியெல்லாம் கொட்டிவிட்டேன் என் உணர்வுகளை,


அளவானவர்கள் பலர் இருக்கிறார்கள்,
அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்,
 தங்களுக்கான பாராட்டாய்... 








This free script provided by
JavaScript Kit