எனது முகநூலில் தமிழ் பித்தனென்று எழுதிய தமிழா(?),
அன்றுடன் நீக்கினேன் உன் நட்பை, அதனால்
நீ பின்னர் பார்திருக்கமாட்டாய் என் பதிவுகளை. ஆனால்
நீ பார்ப்பாய் இந்த வலைப்பதிவை, அதனால்
உனக்கும் சேர்த்துத்தான் சில வரிகள் இதில்.
தமிழ் வாழவேண்டுமென்று தாம் அழிந்துபோனவர்கள் பல்லாயிரம்பேர்,
தமிழ் உயர வேண்டுமென்று தாம் புதைந்த அவர்கள் முன்
நான் சிறு துரும்பு,
எனது முகநூலில் சிங்கள நண்பர்களும் சிலருண்டு,
தமிழை நேசிப்பதால்தான்
அவர்கள் நட்பையும் நேசிக்க முடிகிறது,
அவர்களின் உணர்வும் புரிகிறது,
அவர்களின் மனிதம் தெரிகிறது,
தமிழில் பதிவுகளை வெளியிடும் என்னுடன்
அவர்கள் நட்பும் தொடர்கிறது.
இன்று உலகில் எங்கும் பரந்து வாழும் தமிழா,
நீ பேசுவது தமிழா?
ஏன் கெடுக்கின்றாய் அன்னைத்தமிழை?
உனது தாய் மொழியின் பெருமை உனக்குத்தெரியுமா?
அதன் இனிமை உனக்கு புரியுமா?
கல்வெட்டிலும் உள்ளது உன் தாய் மொழி,
ஏட்டிலும் உள்ளது வரிவடிவம், அதன்
இனிமையை கெடுத்து பெருமையை குலைப்பதுதான் நாகரிகமா?
இரண்டு நிமிடம் உன் தாய்த்தமிழில் உரையாட நீ தடுமாறுகிறாய்.
அந்நிய மொழியினை அள்ளிக்கலக்கிறாய். கை காட்டி
Hi என்று தொடங்குகிறாய்.
So, So என்று கொட்டுகிறாய்.
உன் மூதாதையர் கோழி கலைத்த மொழியது,
காகம் விரட்டிய சொல்லது,
தமிழில் இருக்கிறது கை கூப்பி பணிவாய் ஒரு வணக்கம்.
ஏன் மறந்தாய் அதை?
தமிழராய் பிறந்து இன்று அறிவிப்பாளர்களாய் உள்ளவர்களே,
அந்தோ பரிதாபம்.
உங்கள் வாயில் சிக்கித்தவிக்கிறாள் தமிழன்னை.
பிரான்ஸ் வானொலியில் பிரெஞ்சில் பேசுகிறார்கள்,
ஜப்பான் வானொலியில் ஜப்பான் மொழியில் பேசுகிறார்கள்,
ஜெர்மன் வானொலியிலும் அவர்கள் மொழியையே பேசுகிறார்கள்.
நீங்கள் மட்டுமேன் தமிங்கிலத்தில் பேசுகிறீர்கள்?
தமிழன்னையை நீங்கள் வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை,
தயவுசெய்து சாகடிக்காதீர்...
மூத்த அறிவிப்பாளர்,
முதுபெரும் அனுபவசாலி,
பல்லாயிரம் மேடைகளை பாங்குடன் கண்டவர்,
கணீர் குரலில் தமிழிற்கு பெருமை சேர்த்தவர்,
சிம்மக்குரலோன் B.H.அப்துல் ஹமீட்.
தொட்டுவணங்குகிறேன் அவர் பாதங்களை மனதில்,
நெஞ்சிருத்தி போற்றுகிறேன் அவர் திறமையை என்றும்,
பாருங்கள் அவர் அறிவிப்பை,
கேளுங்கள் தூயதமிழின் இனிமையை,
Hi என்று தொடங்கியதுமில்லை,
Bye என்று முடித்ததுமில்லை.
So, So என்று பொழிந்ததுமில்லை,
தேன்மதுரத்தமிழ் எப்படி விளையாடுகிறது அவர் பேச்சில்?
திக்கெட்டும் புகழ் சேர்த்த தமிழ் எப்படி இனிக்கிறது அவர் குரலில்?
அப்படி உம்மால் முடியாவிட்டலும் பரவாயில்லை.
உங்கள் பேச்சில் கலக்காதீர் வேற்று மொழியை,
தமிழன்னை துன்புறுகிறாள்.
அழகுத்தமிழில் பல்லாயிரம் சொற்களிருக்கின்றன,
எதையும் விரிவாய் எடுத்து கூறுவதற்கு.
அகராதியை புரட்டிப்பார், அது உனக்கே புரியும்.
ஆங்கில ஒரு வார்த்தைக்கு பல பொருள் தமிழில் இருக்கும்.
ஆங்கிலேயன் அடிமையாக்கி ஆண்டான் உலக நாடுகளை,
பொது மொழியாகியது அவர்களது ஆங்கிலம்.
ஆண்ட பரம்பரை அடியுண்டு விழுந்தது பாதாளத்தில்,
அநாதை மொழியாகியது அன்னைத்தமிழ்.
ஆனாலும் உன் மொழி செம்மொழி,
தமிழகத்து தாத்தா கூட இப்போதான் விளித்திருக்கிறார்,
ஆனால் தமிழின் பெருமையை கிளி.இல் உலகமே பார்த்தது,
வியந்தது...
தமிழினி மெல்லச்சாகும் என்றான் பாரதி.
அதை பொய்யாக்கி உயர்ந்தது, ஆனால்
இன்று அவன்கூற்று மெய்ப்படும் நிலையில்,
தமிழன் என்பதற்கு வெட்கப்படும் நீ வரலாற்றை புரட்டிப்பார்.
தமிழை விரும்பி தமிழ்நாட்டில்
தமிழருடன் வாழ்ந்த ஆங்கிலேயர்களையும் அறிவாய்.
தூய தமிழில் ஏழு சொற்களால் இவ்விரண்டு வரிகளாக
1330 குறள்களில் உலகின் தத்துவத்தையே அடக்கியவன் வள்ளுவன்,
வள்ளுவன் குறலில் சொல்லாதது எதுவுமில்லை.
அப்படியான ஒரு நூல் உலகில் வேறுமில்லை. அதனால்தான்
அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையும்
தூயதமிழ் திருக்குறளுக்குண்டு.
நீ ஒன்றும் குறள்களை மனனம் செய்யவேண்டாம்,
உன் சந்ததிக்கு பொருளுடன் சொல்லிக்கொடு,
அது போதும் அவர்களின் சீரான வாழ்விற்கு.
உணவுடன் அன்னைத்தமிழையும் சேர்த்தூட்டு உன் மழலைக்கு,
சேக்ஸ்பியரும் ஹரிபோட்டரும் அல்ல உன் இலக்கியம்.
அகநானூறும் புறநானூறும் அரிய வடிவில்
இருக்கிறது தமிழில்.
அருமையான ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளன,
அறிய வேண்டியவை அவை.
பொழுது போக்கிற்கும் கதைகள் தேவையில்லை உனக்கு.
ஆனையை அடக்கிய அரியாத்தை, மாவீரன் பண்டாரவன்னியன் என
பல வரலாறுகளே இருக்கின்றன.
கட்டப்பொம்மன், பகத் சிங் என நீண்டவை அவை.
முழுதாய் அறிய ஆயுளும் போதாது.
கற்றுக்கொடு அவற்றை, கொஞ்சம் பொறு,
நீ முதலில் கற்றுக்கொள், அப்போதுதான்
கற்றுக்கொடுப்பது உன்னால் முடியும்.
மண் பற்றும் உன்னை பற்றி கொள்ளும்,
மொழிப்பற்றும் தானாய் வரும், அதன்பின்
புரிந்துகொள்வான் உன் பிள்ளை உலக வாழ்வை,
உணர்ந்துகொள்வான் தன் அகதி நிலையை,
அறிந்துகொள்வான் தன் அன்னைத்தமிழ் அழகை,
பார்க்கத்துடிப்பான் தன் தாய் நிலத்தை,
நேசிக்க கற்றுக்கொள்வான் தன் வரலாற்றை,
ஆங்கிலம் உனக்கு பெருமை தரலாம். நீ வசிக்கும் நாட்டு
மொழி உனக்கு தொழிலை தரலாம். ஆனால்
உன் தாய் மொழிதான் உனக்கு அடையாளம்.
பெற்ற தாயை ஒதுக்கிவிட்டு மாற்றான் தாயை தூக்கி
தாயென்று சுமக்க எப்படி முடிகிறது உன்னால்?
தமிழ் தெரியாவிட்டாலும் உன் பிள்ளை நிறத்தால் தமிழன்தான்.
அவனின் நிலைதான் நாளை பரிதாபம்.
அந்நிய நாட்டிலவன் தாய் மொழி தெரியா தமிழனாய்...
ஊர் பெருமையறியா பிள்ளையாய்...
மூன்றாம் உலகப்போர் மூண்டால் தெரியும் உன் நிலை என்னவென்று,
பிறந்த உன் மண் வாசம்
எப்படி மறக்கிறது உனக்கு?
அதைவிட துயரம், இடையிடையே எட்டி பார்க்கும்போது
உன் மண் வாசம் உனக்கு Bad smellஆக தெரிகிறதே?
புழுதி மண்ணில் நீர் விழுந்து மண் மணக்கும் வாசம்
உனக்கு Bad smell
கிணற்று தண்ணீர் உனக்கு ஒவ்வாமையாக இருக்கிறது,
சுடுநீர் கேட்கிறது, ஆனால்
அரைகுறை ஆடையுடன் நீராடி படம்பிடிக்க
கசூரினாக்கடல் உனக்கு ஒத்துவருகிறதே?
ஓ.............. தாங்க முடியவில்லை உன் மாற்றம் எமக்கு,
அமைதியாய் அந்த சுவாசத்தை உள்ளே இழுத்துப்பார்,
நீ மறந்த பல கதைகளை அது பேசும்,
நீ பார்க்காத பல காட்சிகளை அது கூறும்,
தமிழ்த்தாயின் வாசமது,
அவளின் உணர்வு மொழியது,
இத்தனையுமேன்? நன்றியே மறந்துவிட்டாய் தமிழா,
Thanksதானே உனக்கு கூறத்தோன்றுகிறது...
இவற்றை படிக்கும் தமிழா,
உனக்கு பொருந்தாததை எழுதிவிட்டேன் என்று
கோபம் பொங்குகிறதா என்மேல்?
உணர்ச்சி கொப்பளிக்கிறதா?
உனக்கு பொருந்தாவிட்டால் விட்டுவிடு,
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டுமென்று
வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்கள் பரம்பரையில் வந்தவன் நான்.
அதனால்தான் இப்படியெல்லாம் கொட்டிவிட்டேன் என் உணர்வுகளை,
அளவானவர்கள் பலர் இருக்கிறார்கள்,
அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும்,
தங்களுக்கான பாராட்டாய்...
மிக அருமையான விளக்க கவி..
ReplyDeleteசூடு எனக்குமே..
பாராட்டுகள்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி...!
ReplyDelete