உலக நாடுகளால் அதிகம் நோக்கப்பட்ட, திரும்பிப்பார்க்கப்பட்ட ஒரு சிறிய கிராமம் உண்டென்றால் அது முல்லை மாவட்டத்தின் கரையோர கிராமமான முள்ளிவாய்க்காலைவிட வேறு எங்குமே இருக்கமுடியாது. நெய்தலும் மருதமும் இணைந்த அழகிய வளம் செறிந்த ஊர் அது. இது கிழக்கு, மேற்கு என இரண்டு பிரிவுகளுடன் வடக்கு பக்கம் இந்து மாகடலும் தெற்கே நந்திக்கடலும் சூழ அமைந்த குறுகிய வளமுள்ள நிலப்பரப்பாகும். எல்லை ஊர்களாக வடக்கே வலைஞர்மடமும் தெற்கே வட்டுவாகலும் (வெட்டுவாய்க்கால் என்பது மருவி வட்டுவாகல் ஆகியதாக கூறப்படுகிறது) அமைந்துள்ளன. முல்லை-பரந்தன் வீதி இவ்வூரின் ஊடாகவே செல்கிறது. இவ்வீதியின் கிழக்கு புறமாகவே அதிகமான குடிமனைகள் அமைந்திருந்தன. இப்பகுதி கடல்வளம் உள்ளதாக இருந்தும் இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே காணப்பட்டது. வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து தங்கியிருந்து வாடியமைத்து கடல் தொழில் செய்யும் வழக்கம் காணப்பட்டது. குறைவான குடிப்பரம்பலுடன் காணப்பட்ட இவ்வூரில், 90ல் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களும் குடியேறியவுடன் கடற்றொலிலும் வளர்ந்ததுடன் கிராமமும் கலகலப்பாகியது. மேற்கு முள்ளிவாய்க்காலில் க.பொ.தா. சா/தரம் வரை அமைந்த முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஸ்ர உயர்தர வித்தியாலயம் என்ற பாடசாலையும் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலையும் இரு பிரிவிலும் இரண்டு முன்பள்ளிகளும் அமைந்துள்ளன. ஆலயங்களாக எல்லையில் இரட்டை வாய்க்காலில் முருகண்டி பிள்ளையாரும் மேற்கில் வீதிக்கு அருகாக பிள்ளையார், கண்ணன் ஆலயங்களும், கடலோரத்தில் நாவல் மர தோப்பிற்கிடையில் அமைதியான சூழலில் அமைந்த முருகன் ஆலயமும், குறுக்கு வீதியருகே மாதாவின் தேவாலயமும், கிழக்கில் ஒரு பிள்ளையார் ஆலயமும் காணப்படுகின்றன. அறிவுத்தேடலுக்கு, கிராமசபையின் நூலகம் வேப்பமர நிழலில் அமைந்து அணி சேர்த்தது. இவற்றுடன் தபாலகம், சிறிய முதலுதவி நிலையம், கூட்டுறவுச்சங்கம், பொதுச்சந்தை என எல்லா வளங்களுடனும் புதுக்குடியிருப்பை பிரதான நகராக கொண்டு தன்னிறைவான கிராமமாக காணப்பட்டது.
வீதியின் மேற்கு பக்கமாக நந்திக்கடல்வரை வயல் நிலம் விரிந்துசெல்கிறது. இடையே பனங்கூடல்கள் எழுந்துநின்றன. பெருமளவான வயல் பகுதி நீண்ட நாட்கள் செய்கைபண்ணாமல் விடத்தல், உடல்வேல் பற்றைகளுடன் தரிசாகியிருந்தது. 2004இல் ஆழிப்பேரலையின்போது கரையோரம் சிறியளவில் பாதிப்படைந்தது. அதன் பின் சுனாமி மீள் கட்டுமானத்திற்காக கடலோரத்தை அண்டி அமைந்திருந்த நாவல் தோப்புகள் அழிக்கப்பட்டு குடியேற்ற திட்டங்கள் அமைக்கப்பட்டன.
2009 இறுதி போரின்போது இரத்த ஆறு ஓடியபோதுதான் உலகத்தின் கூர்ந்த பார்வையில் இப்பிரதேசம் பட்டது. நான்கு இலட்சம் மக்கள் இக்குறுகிய நிலப்பரப்பில் ஒதுங்கியபோது அழகிய ஊர் அவலக்குரல்கள் விடாது ஒலித்த, தீ நாக்குகள் சுழன்றடித்த மயான பூமியாக மாறியது. எங்கும் வாகனங்கள் நகரமுடியாது குவிய இடமின்றித்தவித்த மக்களிற்கு திறந்தவெளி கடற்கரையும் நீர்தேங்கும் வயல்களுமே தஞ்சமாகின.
உயிரற்ற உடலங்கள் எங்கும் பரந்து காணப்பட்டன. தாராளமாய் குண்டுகள் எங்கும் விதைக்கப்பட்டதால் சாவுகளே எஞ்சி இருந்தன. அழகிய கிராமம் உருக்குலைந்துபோனது. தனது அழிவினால் உலக வரலாற்றிலேயே அழியாத இடம் பிடித்தது. பல புரியாத புதிர்களின் கருவறையாய்யானது. பல இலட்சம் மக்களை தாங்கிய நிலம் இன்று மக்களேயின்றி...
தென்றல் தவழ்ந்த தேசம் இன்று சுடுகாட்டுவாசத்துடன்...
கலகலத்த வீடுகள் இன்று இருளுறைந்து...
மணியொலித்த ஆலயங்கள் இன்று இடிபாடுகளுடன் மௌனமாய்...
மொத்தத்தில் இன்று அது இலங்கையின் "ஹிரோசிமா"வாக...
விடியலிற்காய் கிழக்கிருந்தும்
ReplyDeleteநம் தேசம் ஏனோ விடியவில்லை!!!!
ஒற்றுமை மரணித்துவிட்ட தேசமிது...
ReplyDelete