இரணைமடுக்குளம் 106,500 ஏக்கர் பரப்பில் நீரைத்தேக்கக்கூடியது. அணைக்கட்டின் நீர்ப்பிடிக்கும் எல்லை 34 அடி ஆகும். 227 சதுரமைல் அளவுள்ள மழை நீர் ஏந்து பிரதேசத்தாலும் கனகராயன் ஆற்றாலும் இரணைமடுக்குளம் நிரப்பப்படுகிறது. இரணைமடு குளத்தின் கீழ் 30000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் செய்கை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள குடிதண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் கிளிநொச்சியில் கூடுதலான அளவு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும் என இரணைமடுக் குளம் புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இரணைமடுக்குளம் 34 அடி என்பதற்குப் பதிலாக 28 முதல் 30 அடிக்கே நீர் பிடிக்கப்படுகிறது. மேலதிகமான நீர் வழிந்தோடவிடப்படுகின்றது. ஏனெனில் சேதமடைந்த வான் கதவுகள் மற்றும் புனரமைக்கப்படாத அணைக்கட்டுக்கள் காரணமாக நீர் வெளியே செல்கிறது. மேலும் பிரதான நீர்வழங்கும் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பெருமளவு நீர் வீண் விரயமாகின்றது. மேட்டுநில பயிர்ச்செய்கைக்கான நீர் வழங்கல் புனரமைப்பின்மையால் தடைப்பட்டுள்ளது.
இவற்றிற்கும் மேலாக இன்று, நீண்டு செல்லும் கிரவல் வீதி சிதிலமாகி அங்குவாழும் மக்களின் மனநிலையினை நினைவுபடுத்துவதுபோல் காட்சியளிக்கின்றது. வளர்ப்பு மாடுகளெல்லாம் கட்டாக்காலிகளாகி இருமருங்கும் மேய்கின்றன. முன்பெல்லாம் சந்தைக்கு விளைபொருட்களை கொண்டுசெல்லும், சந்தையால் திரும்பும் விவசாயிகளாலும் அவர்களின் உரையாடல்களாலும் களைகட்டியிருக்கும் பிரதேசம் இப்போது ஆடம்பர நவநாகரீக மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகின்றது. புகைப்பட கருவி ஒருகையிலும் புகையும் சிகரட் மறுகையிலுமாக அங்குமிங்குமாக சென்று இயற்கை அன்னை அள்ளித்தெளித்திருந்த அழகை புகைப்பட கருவியால் சுட்டுக்கொண்டிருந்த அவர்கள் அனைவரும் தென்னிலங்கை பயணிகள். ஆம், அந்தத்திசையில்தான் 'வன்னியின் இதயம்' எனப்படும் இரணைமடு குளத்தின் பிரதான அணைக்கட்டு இருக்கிறது. தூரத்திலிருந்தவாறே பேசமுடியாத பல கதைகளை மெளன மொழியில் அது சொல்லிற்று. காற்றில் கலந்துவந்த மெளன மொழியில் கண்ணீர்தான் அதிகமிருந்தது.
வன்னியின் கம்பீரத்திற்கான ஆதாரசுருதியே இரணைமடு குளம்தான். வன்னியின் பெரும்பாலான குடியிருப்புகள், நகரங்கள், நீர்நிலைகள், வயல்கள், வாய்க்கால்கள் எல்லாமே இரணைமடுவை மையமாகக்கொண்டே உருவாகின. வன்னியின் பச்சைப்பசேலென்ற வனவளத்திற்கான காரணமே வற்றாத அமுதசுரபியாக, சிறிய கடல்போலவே விரிந்து பரந்து நிற்கும் இரணைமடு நீர்த்தேக்கம்தான்.
ஆனால் அத்தனையுமே இப்போ மாறிப்போயிருக்கிறது. போர் அதனையும் விட்டுவைக்கவில்லை. சிறைவைத்ததுபோல் முட்கம்பிச்சுருள்கள், புதிய விகாரை, இரணைமடுவிற்கே தெரியாத புதிய மனிதர்கள், பத்துப்பன்னிரண்டு நவீனரக பேரூந்துகள், குளத்தின் நீரோட்டத்திற்கேற்ப ஆடியசைந்து நகர்ந்துகொண்டிருக்கும் பயணிகளால் வீசப்பட்ட பிஸ்கட் பைகளும் வெற்றுச்சோடாப்போத்தல்களும், காற்றில் கலந்துவரும் 'பிரித்' ஒலி என அச்சூழலே மாறியிருந்தது.
மதியத்தை எட்டிக்கொண்டிருந்த அந்தவேளையில் முகத்தில் வந்துமோதிய அனல்காற்றில் இரணைமடுத்தாயின் பல எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் கலந்திருப்பதை உணரவும்முடிந்தது...
No comments:
Post a Comment