"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Tuesday, December 28, 2010

சாவினை வென்று வாழ்வேன்



'மரணம்(சாவு)'
அது என்றோ என் வாழ்க்கையில் குறுக்கிடப்போகுமொன்று.
எவருக்கும் அது புரியும்போது சாவின்பயம் விலகிவிடும்.
சில சந்தர்ப்பங்களில் அது என்னை உரசிச்சென்றதுண்டு,
ஆனாலும் ஏனோ ஆரத்தழுவவில்லை.
உரசியபோதெல்லாம் உணர்வுகள் மரத்துத்தான் போயின.
மாண்டு மீண்டவர்கள் கூறுவதுபோல் ஒளிவெள்ளம் தோன்றவில்லையெனக்கு.
வானதூதர்கள் வந்து வரவேற்கவில்லை,
ஏன் எமன்கூட வரவேயில்லை.
(ஓ, அவலமாய் சாவுகள் வரும்போது அவர்கள் வருவதில்லையோ?)


விதவிதமாய் சாவுகளை கண்முன்னே கண்டதனால்,
இதுதான் வாழ்க்கையென பதிந்துபோனது.
இப்படி ஏதோ ஒருவழிதான் என் முடிவுமென மனம் உணர்ந்துகொண்டது.
பலரும் நினைக்கவே தயங்குவதை எழுதவும் முடிகிறது.
இப்போ என் விருப்பெல்லாம்...
உயிரோடுள்ளபோது மற்றவர்க்கு என்னால் என்ன பயன்?
அதைவிட அதிகம் பயன் சாவின்பின் கிடைக்கவேண்டும்.
இறந்தபின்னும் என் கண்கள் என்னன்னை பூமியை பார்க்கவேண்டும்.
பார்வையற்ற எவரோவொருவர் அதனால் பார்வை பெறவேண்டும்.
அவ்வாறே பயனுள்ள உடற்பாகங்கள் மீண்டும் பயன்படவேண்டும்.
தீயிலெரிவதால் எவருக்கென்ன பயன்?
குழிக்குள் விதைப்பதனாலும் பூமித்தாய்க்கு அது வேதனை.
வேண்டாம், மீதி மருத்துவத்துறைக்கு பயன்படட்டும்.
சாவின் பின் நிகழ்வுகளும் வேண்டாம்- வீண் பெருமையது.
உணவுகளை கொடுங்கள், ஊருக்கல்ல,
சிறுவர் இல்லங்களிற்கு.
ஆடைகளை கொடுங்கள், அர்ச்சகருக்கல்ல,
பெற்றோர்களற்ற மழலைகளிற்கு.
விரும்பினால் ஒரு சுடரை ஏற்றுங்கள்,
சுடரில் என் உணர்வுகள் பேசும்.
என்னால் பயன்பெற்றோரை உற்றுப்பாருங்கள்,
அவர்களில் நான் சாவினை (மரணத்தை) வென்று வாழ்ந்துகொண்டிருப்பேன்.





This free script provided by
JavaScript Kit

Friday, December 24, 2010

மீண்டும் வேண்டும் எமக்கின்று அதே வரம்


அரணில்லை அகழியில்லை கோட்டையில்லை கோபுரமில்லை
.. .. .. ..தரணியாளும் அரசனிற்கும்  அரசனாக ஓரு பிள்ளை
பரணில்லை பகட்டில்லை பந்தாக்கள் தானுமில்லை
.. .. .. ..கறவைமாட்டுக் கொட்டிலுக்குள் முன்னணைதான் மறைவாகும்

படையில்லை குடையில்லை ஆணையில்லை ஆளுமில்லை
.. .. .. ..பிறந்துவிட்டார் நள்ளிரவில் சிறந்துவிட்டார் இயேசுராஜா
உடுப்பில்லை எடுப்பில்லை அலங்கார வளைவில்லை
.. .. .. ..கந்தையில் பொதிந்துகொண்டு ஏழையாய் இயேசுபாலன்

பெத்தலகேமில் வீடில்லை பட்டணத்தின் பெருந்தொல்லை
.. .. .. ..பந்தமில்லை சொந்தமில்லை யோசேப்பின் ஊரெல்லை
பத்துமாதயெல்லை சுமந்துவரும் மரியன்னை பெருந்தொல்லை
.. .. .. ..சொந்தமண்ணில் அந்நியராக ஊர்விட்டு ஊர்போனதால்

பெருமையில்லை பெருஞ்செலவில்லை பொருளில்லை பாராட்டில்லை
.. .. .. ..மனிதனுக்காய் மனிதனாய் மனிதகுமாரன் பிறந்தார்
உறவெல்லை செல்வரில்லை சீமானில்லை உச்சமில்லை
.. .. .. ..ஏழையின் தோழனாய் எளிமையின் கோலனானார்

தொலைக்காட்சியில்லை தொலைபேசியில்லை அலைவரிசையில்லை வானொலியில்லை
.. .. .. ..ஆனாலுமந்த மந்தைதேடி பறந்தோடி நற்செய்தி
மலையிருட்டில் தலைஉச்சியில் உரசியதீக்குச்சிச்சீறலாய்
.. .. .. ..இறங்கியதோ தெய்வீக ஒளியோடு தேவதூதன்

எதிர்பாரா நிசியிருட்டில் புதிரான ஒளியிறக்கம்
.. .. .. ..மந்தைமேய்ப்பர் சிந்தைகனக்க வந்ததூதர் கண்டுகொண்டார்
அதிர்ந்தமேய்ப்பர் ஆறுதலடைய நற்செய்தி பயப்படாதீரென்றார்
.. .. .. ..உலகரட்சகர் பெத்தலகேம் மாட்டுத்தொழுவில் பிறந்தாரென்றார்!          
(நன்றி- மணி ஓசை.)

வான தூதரின் கூற்று அன்று

.. .. .. ..காத்தது கன்னி மரியாளை  அவப்பெயரில் நின்று...
இனியநாளில் எமது வேண்டுதல் ஒன்று மீட்பரிடம்-
.. .. .. ..இந்த அவனியிலே வேண்டும் எமக்கோர் தேசம்,
.. .. .. ..அந்த தேசத்திலே வீசும் காற்றில் எங்கும் வீசவேண்டும் தமிழ் மம்,
.. .. .. ..தமிரெம்மை உலகமே வியந்து பார்க்கும் நிலை விரைவில் வேண்டும்,
.. .. .. ..இஸ்ரேலிலே உமது மக்களுக்கு நீர் கொடுத்தீரன்று இதே வரம்,
.. .. .. ..மீண்டும் வேண்டும் எமக்கின்று அதே வரம்.




Wednesday, December 22, 2010

வன்னியின் இதயம்



இரணைமடுக்குளம் 106,500 ஏக்கர் பரப்பில் நீரைத்தேக்கக்கூடியது. அணைக்கட்டின் நீர்ப்பிடிக்கும் எல்லை 34 அடி ஆகும். 227 சதுரமைல் அளவுள்ள மழை நீர் ஏந்து பிரதேசத்தாலும் கனகராயன் ஆற்றாலும் இரணைமடுக்குளம் நிரப்பப்படுகிறது. இரணைமடு குளத்தின் கீழ் 30000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் செய்கை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள குடிதண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் கிளிநொச்சியில் கூடுதலான அளவு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும் என இரணைமடுக் குளம் புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இரணைமடுக்குளம் 34 அடி என்பதற்குப் பதிலாக 28 முதல் 30 அடிக்கே  நீர் பிடிக்கப்படுகிறது. மேலதிகமான நீர் வழிந்தோடவிடப்படுகின்றது. ஏனெனில் சேதடைந்த வான் கதவுகள் மற்றும் புனரமைக்கப்படாத அணைக்கட்டுக்கள் காரணமாக நீர் வெளியே செல்கிறது. மேலும் பிரதான நீர்வழங்கும் கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பெருமளவு நீர் வீண் விரயமாகின்றது. மேட்டுநில பயிர்ச்செய்கைக்கான நீர் வழங்கல் புனரமைப்பின்மையால் தடைப்பட்டுள்ளது.  

இவற்றிற்கும் மேலாக இன்று, நீண்டு செல்லும் கிரவல் வீதி சிதிலமாகி அங்குவாழும் மக்களின் மனநிலையினை நினைவுபடுத்துவதுபோல் காட்சியளிக்கின்றது. வளர்ப்பு மாடுகளெல்லாம் கட்டாக்காலிகளாகி இருமருங்கும் மேய்கின்றன. முன்பெல்லாம் சந்தைக்கு விளைபொருட்களை கொண்டுசெல்லும், சந்தையால் திரும்பும் விவசாயிகளாலும் அவர்களின் உரையாடல்களாலும் களைகட்டியிருக்கும் பிரதேசம் இப்போது ஆடம்பர நவநாகரீக மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகின்றது. புகைப்பட கருவி ஒருகையிலும் புகையும் சிகரட் மறுகையிலுமாக அங்குமிங்குமாக சென்று இயற்கை அன்னை அள்ளித்தெளித்திருந்த அழகை புகைப்பட கருவியால் சுட்டுக்கொண்டிருந்த அவர்கள் அனைவரும் தென்னிலங்கை பயணிகள். ஆம், அந்தத்திசையில்தான் 'வன்னியின் இதயம்' எனப்படும் இரணைமடு குளத்தின் பிரதான அணைக்கட்டு இருக்கிறது. தூரத்திலிருந்தவாறே பேசமுடியாத பல கதைகளை மெளன மொழியில் அது சொல்லிற்று. காற்றில் கலந்துவந்த மெளன மொழியில் கண்ணீர்தான் அதிகமிருந்தது.
வன்னியின் கம்பீரத்திற்கான ஆதாரசுருதியே இரணைமடு குளம்தான். வன்னியின் பெரும்பாலான குடியிருப்புகள், நகரங்கள், நீர்நிலைகள், வயல்கள், வாய்க்கால்கள் எல்லாமே இரணைமடுவை மையமாகக்கொண்டே உருவாகின. வன்னியின் பச்சைப்பசேலென்ற வனவளத்திற்கான காரணமே வற்றாத அமுதசுரபியாக, சிறிய கடல்போலவே விரிந்து பரந்து நிற்கும் இரணைமடு நீர்த்தேக்கம்தான்.
ஆனால் அத்தனையுமே இப்போ மாறிப்போயிருக்கிறது. போர் அதனையும் விட்டுவைக்கவில்லை. சிறைவைத்ததுபோல் முட்கம்பிச்சுருள்கள், புதிய விகாரை, இரணைமடுவிற்கே தெரியாத புதிய மனிதர்கள், பத்துப்பன்னிரண்டு நவீனரக பேரூந்துகள், குளத்தின் நீரோட்டத்திற்கேற்ப ஆடியசைந்து நகர்ந்துகொண்டிருக்கும் பயணிகளால் வீசப்பட்ட பிஸ்கட் பைகளும் வெற்றுச்சோடாப்போத்தல்களும், காற்றில் கலந்துவரும் 'பிரித்' ஒலி என அச்சூழலே மாறியிருந்தது.

மதியத்தை எட்டிக்கொண்டிருந்த அந்தவேளையில் முகத்தில் வந்துமோதிய அனல்காற்றில் இரணைமடுத்தாயின் பல எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் கலந்திருப்பதை உணரவும்முடிந்தது...

Friday, December 10, 2010

2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை - மீளும் நினைவுகள்

2004 வருடம் தேதி டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி அமைதியான அதிகாலை நேரம் உலகையே மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்தக் கறுப்பு ஞாயிறு....
பூமி பரப்பெங்கும் அதிர்ச்சியையும் மாறாத சோகத்தையும் அழிவையும் பரவவிட்டுச்சென்ற அந்த பேரலை இலங்கையையும் தாக்கியது. தேசமெங்கும் மரண ஓலம், பிணங்கள், இடிபாடுகள்.... 
கடல்நீர் கழுத்தளவு உயரம், பனையளவு உயரம் என கரையோரமேங்கும் நிறைந்து நின்றது. 
இலங்கையின் வடக்கு – கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. வடபகுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களும் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களும் தெற்கில் அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களும் பெருமளவு அழிவினை எதிர்நோக்கின. இப்பகுதிகளில் பெருமளவிலான உயிர் உடைமை இழப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றது. 
                                       தெற்கு ஆசிய கடலோர நாடுகளில் பகுதிகளை சில மணிநேரங்களுக்குள் உலுக்கி சுமார் மூன்று இலட்சம் மனித உயிர்களை காவுகொண்டு பல்லாயிரம் பேரை குற்றுயிராக்கியதுடன் பல இலட்சம் மக்களை நொடிப் பொழுதில் இடம்பெயரவும் வைத்துவிட்டது. பல கிராமங்கள் உலக வரைபடத்தில் இருந்தே துடைத்தெறியப்பட்டன. நினைத்திராத பொழுதில் கண்முன்பே நடந்து முடிந்துவிட்ட அந்த கோர அனர்த்தத்தின் விளைவுகளை ஜீரணிக்க முடியாமலும் இழப்பின் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமலும் பல லட்சம் மக்களை அந்த அவல ஞாயிறு விரக்தியின் விளிம்பில் விட்டுச் சென்றது. 

இப்பேரிடர் இலங்கையை மட்டுமல்லாது இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கரையோர மக்களையும் கடுமையாக தாக்கிவிட்டது. 

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து 2010/12/26உடன் 6ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனாலும் அந்த கோரமான நாட்கள் நம்மில் இருந்து விரைவில் மறைந்து போகாது. சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில் , ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது. அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் 2004 டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி  சுமார் 250,000இற்கும் மேலான மனித உயிர்களை பலிகொண்டும் , பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினை ஏற்படுத்தியுமிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்லாமல் பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்டது.
 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் நிகழ்ந்த இவ் அனர்த்தத்தின் பின்னரே "சுனாமி" என்ற பெயர் இலங்கையில் பலருக்குத் தெரியவந்தது.ஆனால் இவ் அனர்த்தங்கள் முன்பும் உலகின் பல பகுதிகளில் இடம்பெற்று அழிவுகளை ஏற்படுத்தியுள்ளமை தெரிந்ததே.ஹவாய் தீவில் 1819இலிருந்து 46 சுனாமிகள் தாக்கியிருக்கின்றன. 1960இல் சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகப் புற ப்பட்ட அலை 16000 கி. மீ. தாண்டி ஜப்பானை வந்து தாக்கியது. 22 மணி நேரம் பயணம் செய்தது.  1971 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள "ரியுகியூ" தீவுகளை 85 மீற்றர் உயரமான சுனாமி அலைகள் முதல் முதலில் தாக்கியுள்ளது.
 யாழ்ப்பாண மொழியில் சொல்வதாயின் 5 பனை (ஐந்து பனை) மரம் உயரத்தில் ஆழிப்பேரலை தாக்கியழித்தது.
26.12.2004 இல் அதிகாலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவில் உள்ள சுமாத்திரா தீவின் வடமேல் கரையை அடுத்த கடலில் ஒன்பதாயிரம் (9000) மீற்றர் தொடக்கம் பத்தாயிரம் (10000) மீற்றருக்கு இடைப்பட்ட புவியாழத்தில் பூமியை மூடி இருந்த தகட்டோடு விலகியதால்தான் அது புவிநடுக்கமாக மாறி சுனாமி உருவாகியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
புவி நடுக்கம் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் பூமியில் எங்கேயாவது ஒரு இடத்தில் இடம்பெறுகின்றது. புவியோட்டின் ஒரு பகுதி இயற்கையாகவே சடுதியாக அதிர்ந்தால் அதனை புவி நடுக்கம் என அழைப்பார்கள். இதனையே எமது முன்னோர்கள் பூகம்பம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு இரணடரை மணி நேரத்திலும் இடம்பெறுகின்ற புவி நடுக்கங்கள் எல்லாம் அழிவுகளை ஏற்படுத்தமாட்டாது. சில வேளைகளில் வேகமாக இடம்பெறும் புவிநடுக்கங்களே அழிவுகளை ஏற்படுத்துகின்றன.
சுனாமியும் கடலடி பூகம்பத்தின் விளைவினால் உருவாகுவதாகும். கடல் நீரின் மட்டத்தைச் சற்றேதான் சுனாமி உயர்த்துகிறது. புறப்படும் போது அந்த அலை மூன்று நான்கு அடிதான் உயரம் இருக்கும். நீரில் கல் எறிந்தால் வட்ட வட்டமாக அலைகள் பரவுவதுபோல் ஒரு இராட்சத வட்டம் ஆரம்பபுள்ளியிலிருந்து பரவி தன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆழ் கடலில் சுனாமி அவ்வளவு ஆபத்தானதல்ல. உயரம் குறைவாக, வேகமாக பரவுவதால் நடுக்கடலிலுள்ள கப்பல்களை ஒரு தூக்கு தூக்கிவிட்டு பயணத்தைத்தொடரும். குறுகிய காலத்தில் அது 1000 கி.மீ. வரையான வேகத்தில் கரையைத் தாக்கும் போது அதன் சீற்றம் அதிகமாக இருக்கும். கடலோர கட்டடங்களை அழிக்கும். திரும்பும்போது அனைத்தையும் இழுத்துச் செல்லும். 2004 காலப்பகுதியில் பேராபத்துக்கான எச்சரிக்கை தரும் கருவிகள் எதுவும் இங்கு இருக்கவில்லை. அதற்கான செய்தித் தொடர்புகள் எதுவுமில்லை. இருந்திருந்தால் சுனாமி சுமாத்திராவிலிருந்து புறப்பட்டு வந்து சேரும் சில மணி நேரத்துக்குள் நம் கடலோர மக்கள் அனைவரையும் காப்பாற்றியிருக்கலாம். 

ஒவ்வொரு வருடமும் உலகத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் தொடக்கம் ஐம்பதாயிரம் (40,000-50,000) வரையிலான சிறிய புவிநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கூடுதலான மக்கள் இறக்கின்றனர். வீடுகள், கட்டடங்கள், சில கிராமங்கள் அழிந்து போகின்றன. சில நதிகளும் திசைமாறி ஓடுகின்றன. புவிநடுக்கம் நேரடியாக மக்களை கொல்லாவிட்டாலும் அதனால் ஏற்படும் தாக்கங்களினால் மக்கள் கூடுதலாக காவு கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக சமுத்திரத்தின் அடித்தளத்தில் ஏற்படும் புவிநடுக்கம் பெரிய பேரலைகளை உருவாக்கி கரை யோரங்களில் உள்ள வலுவுள்ள உயிரினங்கள் உட்பட மாடமாளிகைகள், இராஜ கோபுரங்களைக் கூட நொடிப்பொழுதில் தகர்த்து எறிகின்றன. புவியின் உள்ளமைப்பு மூன்று பெரும் படைகளைக் கொண்டதாக இருக்கின்றது. 


1. புவியோடு (Earth Crust)
2.இடையோடு (Mesosphere / Mantle)
3.கோவளம் (Bery Sphere / Centro sphere)
இவற்றின் இடையேயான அசைவுகளே நடுக்கங்கள் ஏற்பட பிரதானமான காரணமாகும். அகழிகள் காணப்படும் இடங்களினை அண்டியே கூடுதலாக புவிநடுக்கம் ஏற்படுகின்றது. 1906 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.15 மணிக்கு கலிபோர்னியாவில் பாரிய ஒரு புவிநடுக்கம் தாக்கியது.  கலிபோர்னியாவின் வடகரையோர நிலம் (450) நானூற்று ஐம்பது கிலோமீற்றர் தூரத்திற்கு பிளந்தது. உலகிலே மிக நீளமான அகழியின் பெயர் சில்லியன் அகழியாகும். இதன் நீளம் 5900 (ஐந்து ஆயிரத்து தொள்ளாயிரம்) கிலோமீற்றர். இதன் அகலமே 100  (நூறு) மீற்றர்தான்.
ஆறாம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட புவி நடுக்கத்தினால் இறந்த (பலியான) மக்கள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமென புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 1908 ஆம் ஆண்டு இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கம் சுமார் அரை மணி நேரம் நிலைத்தது. இதில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பலியானார்கள். 1920 ஆம் ஆண்டில் சீனாவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். 1917 ஆம் ஆண்டில் நிகழ்ந்த புவி நடுக்கத்தில் ஒரு இலட்சம் மக்கள் மீண்டும் சீனாவில் கொல்லப்பட்டனர். டோக்கியோவில் 1923 ஆம் ஆண்டு நடந்த புவி நடுக்கத்தில் இரண்டரை (2 1/2) இலட்சம் மக்கள் அழிந்தனர். 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட புவி நடுக்கத்தில் (35000) முப்பத்தைந்தாயிரம் மக்கள் இறந்தனர்.
இதைவிட பல இடங்களில் புவி நடுக்கம் ஏற்பட்டு தாக்கங்களை ஏற்படுத்தினாலும் கூட இவைகளை விட மிகக் குறைவான தாக்கங்களையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கூட 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறிதளவான புவிநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள், பாலங்கள் சரிந்தன. பெரிதளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்திகதி ஏற்பட்ட சுனாமியின் போது இந்து சமுத்திரத்தின் கரையோரப் பகுதி முழுமையாக பாதிப்பிற்கு உள்ளானது. இதில் இலங்கையிலேயே ( 38,195) முப்பத்தி எட்டாயிரத்து நூற்றுத் தொண்ணூற்று ஐந்து பேர் உயிரிழந்துள்தாகவும்  இதில் தமிழர்கள் வாழ்விடங்களிலே கூடுதலான உயிரிழப்பும் சொத்திழப்பும் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிவாரண அமைச்சின் அதிகாரிகள் 2005 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை (இயற்கை தாண்டவம்) 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாளில் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் (கடலில் ) பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா, தமிழர் தாயகப்பகுதிகள் , சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. 
தமிழர் தாயகப்பகுதிகளில் காலை 8.35 தொடக்கம் 10 மணிக்குட்பட்ட சில மணி நேரத்தில் இந்த அழிவு நடந்தது. ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் இலங்கையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, கம்பகா ஆகிய பன்னிரண்டு மாவட்டங்கள் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர். இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளே மோசமாக அனர்த்தத்தினால் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்களும் ஆய்வுகளும் விளக்குகின்றன. இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு கள்ளப்பாடு என்ற கிராமம் முற்றாகவே அழிந்தது.


















அதற்கடுத்தபடியாக அம்பாறையிலும் அதற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பிலும் அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை தொடக்கம் வடமராட்சி வடக்கு, கிழக்கு பகுதிகள் அழிவுகொண்டன. 

இந்த அழிவு தமிழர் தாயகப்பகுதிகளில் 64 வீதமாக பதிவாகியது, சுனாமியால்  இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக அதிகளவிலான உயிர்கள் தமிழர் தாயகப்பகுதிகளிலேயே காவு கொள்ளப்பட்டிருந்தன. தமிழர் தாயகப்பகுதிகளில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை சுமார் இருபதாயிரம் ஆகும். இதில் அதிகமாக தமிழ்மக்களே பலிகொள்ளப்பட்டனர். அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் பலரும் பலி கொள்ளப்பட்டனர். இதில் பெரும் தொகையான வீடுகள் கோயில்கள், பாடசாலைகள், அரச வைத்திய சாலைகள் உட்பட பல கட்டடங்கள் தரை மட்டமாகின. தங்கநகைகள் உட்பட பல சொத்துக்கள் அழிந்தன.
சுமாத்திராத்தீவின் சுனாமி மிகவும் கொடிய வேகத்துடன் பொங்கி எழுந்து உருவாகிய இடத்தில் சுனாமிப்பேரலையின் நீளம்(160) நூற்று அறுபது கிலோமீற்றர் கொண்டிருந்தது. நடுக்கடலில் வரும் பொழுது மணிக்கு(450) நானூற்று ஐம்பது தொடக்கம் (800)எண்ணூறு கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் இரண்டு பனை வரையிலான உயரத்தில் உயர்ந்து வந்தது. அதேநேரம் ஆழங்குறைந்த கரையில் வரும் போது மேலும் அரைப்பனை உயர்ந்து இரண்டரைப் பனை உயரத்தில் சராசரி உயரம் முப்பது மீற்றராக உயர்ந்து அதன் வேகம் மணிக்கு (100) நூறு கிலோமீற்றர் வரையாக குறைந்து கரையை உட்புகுந்துடைத்து, எடுத்துவந்த வேகத்தை விட சற்றுக்குறைவான வேகத்தில் வெளியேறியது. இந்து சமுத்திரத்தின் பிராந்திய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளும், பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியக் கடற்பரப்பில் உள்ள கடற்கரைப்பகுதிகளும் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னம் ஆகியன. இதில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு, சோமாலியா, மியான்மார், வங்களாதேசம் ஆகிய நாடுகள் கூடுதலான பாதிப்புக்களை சந்தித்தன. 
இந்தோனேசியாவில் சுமாத்திரா, யாவா, கனிமான்ரன் ஆகிய இடங்களில் கூடுதலாக பேரழிவுகளை சந்தித்தது. இதேபோல் இந்தியாவில் நாகபட்டினம், கன்னியாகுமாரி, கடலூர், பாண்டி, சென்னை, அந்தமான், நிக்கோபர், கேரளா, ஆந்திரா ஆகிய இடங்கள் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அவலமாக சோகம் நிறைந்த நிலையில் வாழ்கின்றனர். குடும்பத் தலைவர் களை இழந்த பெண்கள் இன்றும் தமது வரலாறு, தமது வாழ்வு முடிந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். 
அநேகமான குடும்பங்கள் உளவளத் துணையின் ஆலோசனையுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றன. சுனாமி கணப்பொழுதில் வந்து கரையோரப் பிரதேசத்தினையும் அதனை அண்டிய பகுதியினையும் அழித்துவிட்டு சென்றுவிட்டது. இவ்வழிவிலிருந்து மக்களை மீட்பதற்காகவும் வளமுள்ள வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவும் இலங்கையரசு, அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஒரு பிரிவும், இதனை விட சர்வதேச தனியார் நிறுவனங்களும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும், மக்களின் வாழ்க்கையையும் வளத்தையும் கட்டி எழுப்ப முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவை நிறைவடைய முன்னரே போர்ச்சுனாமி மீளவும் தாயகப்பகுதிகளை சிதைத்துவிட்டது.    
சுனாமி அழிவுகளுக்குப்பின்னனர் பாதிப்புக்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்ற நாடுகள் தமது நாட்டு மக்களை இயற்கை அனர்த்தங்களின் பொது எவ்வாறு பாதுகாப்பது? அவர்களுக்கு எப்படி அறிவூட்டுவது? போன்ற வேலைகளை 2004ஆம் ஆண்டுக்குப்பிறகு ஆரம்பித்தன. அதன்படி சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைத்து அவற்றினை ஒத்திகைக்கு உட்படுத்துதல், மக்களுக்கு சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் நடைபெறும் போது எவ்வாறு நடந்து கொள்வது என்பதுபற்றி அறி வூட்டும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தோனேஷியாவைப் பொறுத்தவரை நில நடுக்கம் சாதாரணமாகவே அடிக்கடி ஏற்படுகிறது. இந்தோனேஷியாவும், தாய்லாந்தும் அமெரிக்காவின் ஹவாய் தீவில் செயல்பட்டு வரும் பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளன. எனினும், இந்த நாடுகளை டிச. 26 அன்று சுனாமி தாக்கிய சமயத்தில், அத்தாக்குதல் பற்றி அமெரிக்காவோ, சுனாமி எச்சரிக்கை மையமோ முன்கூட்டியே தகவல் கொடுத்து எச்சரிக்கத் தவறியிருந்ததாக குற்றச்சாட்டும் இருக்கிறது. பல நூறாயிரம் யிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுற்றுலாத் துறைக்கு கடும் சேதத்தை விளைவித்தது. இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுனாமியால், கடும் சோதனைகளை எதிர் கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் இருக்கையில் ஒருவாறாக பாதிக்கப்பட்ட நாடுகள் பல வெளிநாடுகளின் உதவிகளுடன் தமது நாடுகளைக் கட்டியெழுப்பின. சில நாடுகளில் இன்னமும் முழுமை பெற்றதாக இல்லை எனத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இந்தோனெசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் மீண்டும் மீண்டும் அழிவுகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் பாதிப்புக்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. 
உலகளவில் சுனாமி ஏற்படுத்திவிட்ட வடு காய்வதற்கே  நீண்ட காலமாகும். அதற்குள் இன்னும் எத்தனையோ கோர அழிவுகளையும் எமது கரையோர மக்கள் கண்டுவிட்டார்கள். பல அழிவுகளை ஏற்படுத்திய "சுனாமி"யின் கோரப்பிடிக்குள் சிக்கி உயிர் இழந்த அனைத்து மக்களின் ஆன்மாக்களும் அமைதிபெற நாமும் பிரார்த்திப்போம்.


( படங்கள் இணையங்களிலிருந்து) 

Thursday, December 2, 2010

முள்ளிவாய்க்கால் -ஒரு நோக்கு.

உலக நாடுகளால் அதிகம் நோக்கப்பட்ட, திரும்பிப்பார்க்கப்பட்ட ஒரு சிறிய கிராமம் உண்டென்றால் அது முல்லை மாவட்டத்தின் கரையோர கிராமமான முள்ளிவாய்க்காலைவிட வேறு எங்குமே இருக்கமுடியாது. நெய்தலும் மருதமும் இணைந்த அழகிய வளம் செறிந்த ஊர் அது.  இது கிழக்கு, மேற்கு என இரண்டு பிரிவுகளுடன் வடக்கு பக்கம் இந்து மாகடலும் தெற்கே நந்திக்கடலும் சூழ அமைந்த குறுகிய வளமுள்ள நிலப்பரப்பாகும். எல்லை ஊர்களாக வடக்கே வலைஞர்மடமும் தெற்கே வட்டுவாகலும் (வெட்டுவாய்க்கால் என்பது மருவி வட்டுவாகல் ஆகியதாக கூறப்படுகிறது) அமைந்துள்ளன. முல்லை-பரந்தன் வீதி இவ்வூரின் ஊடாகவே செல்கிறது. இவ்வீதியின் கிழக்கு புறமாகவே அதிகமான குடிமனைகள் அமைந்திருந்தன. இப்பகுதி கடல்வளம் உள்ளதாக இருந்தும் இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயமே காணப்பட்டது.  வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து தங்கியிருந்து வாடியமைத்து கடல் தொழில் செய்யும் வழக்கம் காணப்பட்டது. குறைவான குடிப்பரம்பலுடன் காணப்பட்ட இவ்வூரில், 90ல் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களும் குடியேறியவுடன் கடற்றொலிலும் வளர்ந்ததுடன் கிராமமும் கலகலப்பாகியது. மேற்கு முள்ளிவாய்க்காலில் க.பொ.தா. சா/தரம் வரை அமைந்த முள்ளிவாய்க்கால் மேற்கு  கனிஸ்ர உயர்தர வித்தியாலயம் என்ற பாடசாலையும்   கிழக்கில் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க பாடசாலையும் இரு பிரிவிலும் இரண்டு முன்பள்ளிகளும்  அமைந்துள்ளன. ஆலயங்களாக எல்லையில் இரட்டை வாய்க்காலில் முருகண்டி பிள்ளையாரும் மேற்கில் வீதிக்கு அருகாக பிள்ளையார், கண்ணன் ஆலயங்களும், கடலோரத்தில் நாவல் மர தோப்பிற்கிடையில் அமைதியான சூழலில் அமைந்த முருகன் ஆலயமும், குறுக்கு வீதியருகே  மாதாவின் தேவாலயமும், கிழக்கில் ஒரு பிள்ளையார் ஆலயமும் காணப்படுகின்றன. அறிவுத்தேடலுக்கு, கிராமசபையின் நூலகம் வேப்பமர நிழலில் அமைந்து அணி சேர்த்தது. இவற்றுடன் தபாலகம், சிறிய முதலுதவி நிலையம், கூட்டுறவுச்சங்கம், பொதுச்சந்தை என எல்லா வளங்களுடனும் புதுக்குடியிருப்பை பிரதான நகராக கொண்டு தன்னிறைவான கிராமமாக காணப்பட்டது. 
வீதியின்  மேற்கு பக்கமாக நந்திக்கடல்வரை வயல் நிலம் விரிந்துசெல்கிறது.  இடையே பனங்கூடல்கள் எழுந்துநின்றன. பெருமளவான வயல் பகுதி நீண்ட நாட்கள்  செய்கைபண்ணாமல் விடத்தல், உடல்வேல்  பற்றைகளுடன் தரிசாகியிருந்தது. 2004இல் ஆழிப்பேரலையின்போது கரையோரம் சிறியளவில் பாதிப்படைந்தது. அதன் பின் சுனாமி மீள் கட்டுமானத்திற்காக கடலோரத்தை அண்டி அமைந்திருந்த நாவல் தோப்புகள் அழிக்கப்பட்டு குடியேற்ற திட்டங்கள் அமைக்கப்பட்டன.
2009 இறுதி போரின்போது இரத்த ஆறு ஓடியபோதுதான் உலகத்தின் கூர்ந்த பார்வையில் இப்பிரதேசம் பட்டது. நான்கு இலட்சம் மக்கள் இக்குறுகிய நிலப்பரப்பில் ஒதுங்கியபோது அழகிய ஊர் அவலக்குரல்கள் விடாது ஒலித்த, தீ நாக்குகள் சுழன்றடித்த  மயான பூமியாக மாறியது. எங்கும் வாகனங்கள் நகரமுடியாது குவிய இடமின்றித்தவித்த மக்களிற்கு திறந்தவெளி கடற்கரையும் நீர்தேங்கும் வயல்களுமே தஞ்சமாகின.

   











உயிரற்ற உடலங்கள் எங்கும் பரந்து காணப்பட்டன. தாராளமாய் குண்டுகள் எங்கும் விதைக்கப்பட்டதால் சாவுகளே எஞ்சி இருந்தன. அழகிய கிராமம் உருக்குலைந்துபோனது. தனது அழிவினால் உலக வரலாற்றிலேயே அழியாத இடம் பிடித்தது. பல புரியாத புதிர்களின் கருவறையாய்யானது. பல இலட்சம் மக்களை தாங்கிய நிலம் இன்று மக்களேயின்றி... 















தென்றல் தவழ்ந்த தேசம் இன்று சுடுகாட்டுவாசத்துடன்... 
கலகலத்த வீடுகள்  இன்று இருளுறைந்து... 
மணியொலித்த ஆலயங்கள் இன்று இடிபாடுகளுடன் மௌனமாய்... 
மொத்தத்தில் இன்று அது இலங்கையின் "ஹிரோசிமா"வாக...



Tuesday, November 30, 2010

கீரிமலை நகுலேச்சரம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் முழு முதற் கடவுகளாகப் போற்றப்படும் சிவனுக்கு ஈழமெங்கும் பல ஆலயங்கள் இருந்ததை நாம் அறிகிறோம். ஈழத்திலுள்ள ஈச்சரங்க்களுள் ஒன்றாகவே கீரிமலை நகுலேச்சரமும் விளங்குகிறது. அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவன் கோவில்களில் கீரிமலை சிவன் கோவிலே மிகவும் பழைமையானதாகும். இவ்வரலாற்று சிறப்புப் பெற்ற கோவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறை ஆகிய மூன்று கிராமங்களும் உள்ளடங்கிய பிரதேசம் 'கோயிற் கடவை' என்ற பெயரால் சிறப்பாக அழைக்கப்பட்டு வந்தது.


இக்கோவில் ஆதி காலத்தில் நகுலேஸ்வரம், திருத் தம்பலேஸ்வரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. 'விஜயன் தனது அரசாட்சியை ஆரம்பிக்கும் முன்னர், தன் அரசுக்குப் பாதுகாப்பாக நான்கு திக்கிலும் நான்கு சிவாலயங்களை எழுப்பினார்' என யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது.


வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதியில் நாக இனத்தவர்களில் இராசதானியாக விளங்கிய கதிரமலை என்ற இடமே தற்போது கந்தரோடை என அழைக்கப்படுகிறது. நாக அரசர்களுடன் நட்புக் கொண்ட விஜயன், வட பகுதிக்குப் பாதுகாப்பாக கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பகுதியில் திருத்தம்பலேசுவரன், திருத்தம்பலேசுவரி கோவிலைக் கட்டினான். மேலும் காசியிலிருந்து வாமதேசாசாரியன் என்னும் பிராமணரையும் இங்கு வரவழைத்து கோவில் பூசை கடமைகளையும் செய்வித்தான் எனவும் இக்கோவில் காணப்பட்ட கிராமத்திற்கு கோவிற் கடவை என்ற சிறப்புப் பெயர் உண்டானது எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இச்சிவாலயம் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளதை புராண வரலாறுகளும் ஐதீகங்களும் எமக்கு விளக்கியுள்ளன. பல்வேறு காரணங்களால் காலத்துக்குக் காலம் ஆலயங்கள் அழிக்கப்பட்டதை நாம் அறிகிறோம். எனவே அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயத்தை விஜயன் மீளக் கட்டியிருக்கலாமேயன்றி புதிதாக ஆலயத்தைக் கட்டினான் என்பதை ஏற்க முடியாது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.


திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகிய ஆலயங்கள் எவ்வளவு பழைமையானதோ, அத்தகைய பழைமை கொண்ட ஆலயம்தான் நகுலேஸ்வரம் என்பது பொதுவான கருத்தாகும். கி. மு. 1500 வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் அரசாண்ட பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு புண்ணிய தீர்த்த தலமான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் என்ற மகாபாரதக் குறிப்பில் இருந்து நகுலேஸ்வரம் என்ற தலத்தின் தொன்மையை நாம் அறியலாம்.


நகுல முனி என்பவர் சாபம் காரணமாக தான் பெற்ற கீரிமுகத்தை நீக்குவதற்காக கோவிற் கடவை மலைச்சாரலில் தங்கியிருந்து அங்கிருந்த புனித தீர்த்தத்தில் நீராடி தன் முகத்தில் இருந்த குறை நீங்கப் பெற்றார் என்பது வரலாறு ஆகும். இக்காரணத்தாலே அவர் தங்கியிருந்த இடத்திற்கு கீரிமலை என்ற பெயர் வழங்கப்பட்டது. இச் சம்பவத்தின் பின்னர் திருத்தம்பலேசுவரர் கோவில் 'நகுலேசர் கோவில்' என்றும் திருத் தம்பலேசுவரி கோவில் 'நகுலாம்பிகை' கோவில் எனவும் வழங்கப்பட்டது என யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது.


கீரிமலைத் தலத்தின் சிறப்பை மாருதப் புரவீகவல்லியின் வரலாற்றிலும் நாம் காணக் கூடியதாக உள்ளது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான மாருதப் புரவீக வல்லிக்கு குன்ம நோய் காரணமாக குதிரை முகம் பெற்று காணப்பட்டாள். இதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மாருதப்புரவீக வல்லிக்கு 'மருந்துகள் எதுவும் பயன்தராது. தீர்த்த யாத்திரையின் மூலமே சுகமடைவாய்' என சந்நியாசி ஒருவர் கூறினார்.


மேலும் 'இலங்கையின் வடமுனையில் கீரிமலை என்றொரு மலையுண்டு. அங்கே உவர்ச்சல் மத்தியில் சுத்த தீர்த்தமும், மலையருவித் தீர்த்தமும் கலந்த உத்தம தீர்த்தம் ஒன்று உண்டு. அப்புனித தீர்த்தத்திலே நீராடினால் சுகம் பெறுவாய்' எனக் கூறினார். அவர் வாக்கை அருள் வாக்காகக் கொண்டு புறப்பட்டு வந்த மாருதப் புரவீக வல்லி, கீரிமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு வணங்கி, தன் சாபம் பற்றிக் கூறினாள். நகுல முனிவரும் தல மகிமை, தீர்த்த விசேடம் ஆகியவற்றை அவளுக்கு எடுத்துக் கூறி, தன் கீரி முகம் மாறிய அற்புதத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மாருதப் புரவீக வல்லி அங்கு தங்கியிருந்து தீர்த்தமாடி, சிவாலய தரிசனம் செய்து குன்ம நோய் நீங்கி, குதிரை முகம் மாறி, அழகிய பெண்ணானாள். அவள் தான் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் கந்த வேளுக்கு ஒரு ஆலயம் அமைத்தாள் என்றும் அவ்வாலயமே 'மாவிட்டபுரம்' கந்தசாமி கோவில் என்றும் வரலாறு கூறுகின்றது.


ஆனாலும் நகுலேஸ்வரத்தின் மிகப் பழைமையான கோவில் கடலில் அமிழ்ந்து விட்டது. இரண்டாவது கோவில் போர்த்துக் கேயரால் தரை மட்டமாக்கப்பட்டது. மூன்றாவது கோவில் போரில் சிதைவடைந்து தற்போது புதுப்பிக்கப்படுகிறது என்றொரு கருத்தும் உண்டு. முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோவில் கடற்கரையில் உள்ள மலையில் இருந்ததாகவும் கடற்கோள் ஒன்று ஏற்பட்ட போது அக்கோவில் கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது கி. பி. 1621 ஆம் ஆண்டளவில் இரண்டாவது ஆலயம் முற்றாக தரை மட்டமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் வழிகாட்டலில் கி. பி. 1878 ஆம் ஆண்டு மூன்றாவது கோவில் கட்டப் பெற்றதாகவும் நாம் அறிகிறோம். கி. பி. 1878 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் கீரிமலைக் கோவில் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை நாவலர் வெளியிட்டார். அத்துண்டுப் பிரசுரத்தில் மேற்கூறப்பட்ட வரலாறு கூறப்பட்டுள்ளதுடன் கீரிமலையில் ஒரு சிவன் கோவிலை கட்டுவதற்கு பொது மக்களிடம் இருந்து பொருளுதவியும் கோரப்பட்டுள்ளது. கீரிமலை சிவாலயம் உருவாவதற்கு முன்னர் நாவலர் சிவபதம் அடைந்தாலும் அவருடைய வேண்டுகோளை ஏற்ற சைவ மக்கள் அப்பணியை நிறைவேற்றினர்.


நகுலேஸ்வரம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் மூன்று பிரகாரங்களும் ஐந்து கோபுரங்களும் கொண்ட மிகப் பெரிய ஆலயமாக விளங்கியுள்ளது. ஆனாலும் தற்போது உள்ள ஆலயம் சிவாகம விதிகளுக்கும் சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமையவே உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான நிலப்பரப்பு முருங்கை கற்பாறையின் மேலே காணப்படுகிறது. மேலும் வட கடற்கரையில் நிலத்தில் இருந்து கடலுக்குள் பாயும் பல அருவிகள் உண்டு. இக் கருவிகளுள் முக்கியமான அருவியாக கீரிமலை அருவி போற்றப்படுவதுடன் மிகப் பரிசுத்தமானதாகவும் கருதப்படுகிறது.


'Ancient Hindu Temples of Sri Lanka' என்ற நூலின் ஆசிரியரான திரு எஸ். ஆறுமுகம் அவர்கள் தனது நூலில் '....... The spring water how to Keerimalai is of great value and barhing in its waters imports therapeutic medicinal benefit to the human body. From its source in the rocks of Tellipallai - Maviddapuram (30 feet elevation) area, the spring waters flowing through the crecvices and fissures of the carbonated rocks, encountering tea water as it emerges at Keerimalai, acquire chemical values and minute electrolyt. ic charges, which tonic the functioning of the human syste' என்று குறிப்பிட்டுள்ளமை கீரிமலையிலுள்ள புனித தீர்த்தத்தின் பெருமையை எடுத்துரைப்பதாக உள்ளது.


பூஜை முறைகள் இவ்வாலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய வழிபாடுகள் சிவாகம முறைப்படி நடைபெறுவது வழக்கமாகும். இங்கு திருப்பள்ளி எழுச்சி தொடக்கம் அர்த்த சாமப் பூ
சை வரை நாள்தோறும் ஆறு கால பூசை நடைபெறுகின்றது. ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக சில காலம் பூசை வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் மூல மூர்த்திக்கு திருமணமான சிவாச்சாரியார்களே பூசை செய்யும் மரபு இன்றும் இக்கோவிலில் உண்டு.

திருவிழாக்கள் கீரிமலைச் சிவன் கோவிலின் வருடாந்த உற்சவம் மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி அமாவாசை தினத்தன்று தீர்த்த உற்சவம் நிகழும். அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் கொடியேற்றம் நடைபெறுவதுடன் சித்திரை வருடப்பிறப்பு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். மேலும் மாதந்தோறும் நடைபெறும் சோம வாரம், மாதப் பிறப்பு, வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், மானம் பூ, ஆவணி உத்தரம், கார்த்திகை விளக்கீடு, புரட்டாதிச் சனி, திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாசல், ஏகாதசி போன்ற பல்வேறு விரதங்களும் விழாக்களும் இங்கு சிறப்புற நடைபெறுவதுண்டு.


வழிபாட்டிலே சிவ வழிபாடு சிறப்புப் பெற்ற வழிபாடாகக் காணப்படுகிறது. சிவம் என்பதற்கு மங்கலம், சுபம், நன்மை, பேரானந்தம், உண்மை, மேன்மை என பல பொருள்கள் கொள்ள முடியும். ஆகவே உடற் பிணி, உளப் பிணி இரண்டையும் ஒருங்கே அழிக்கவல்ல கீரிமலைச் சிவன் கோவில் வரலாற்றில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இவ்வாறான சிறப்பு பெற்ற தலம் இன்று உள்ள நிலை கவலைக்கிடமானதாகும். பெரும் அழிவுக்கு உள்ளாகியிருக்கும்  இதனை புனரமைக்க ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.   
இவ்வளவு புனிதமான கேணியில் பாதணிகளுடன் இறங்குவதோ  சவர்காரம் பாவித்து குளிப்பதோ முற்றாக தடை செய்யப்பட்ட விடயமாகும். இதை அங்கு வரும்  சுற்றுலாப்பயணிகள் பின்பற்றுவதில்லை. அவர்கள் தாம் அணிந்து வந்த பாதணிகளைகூட புனித கீரிமலை கேணியில் கழுவுகின்றனர். இது அதன் புனித தன்மையை கெடுக்கும் செயலாகும். இதனை தடுக்க ஆலய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.ஆலய சூழலில் பெயரளவிற்கு அறிவுறுத்தல் பலகைகள் வைப்பது மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 

Saturday, November 27, 2010

யமுனா ஏரியும் மந்திரிமனையும்

யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணிஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது யாழ்ப்பாண அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கூழங்கை சக்கரவர்த்தியின் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலை, நல்லூர் நகரம் உருவாக்கப்பட்டது பற்றிக் கூறும்போது,
....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........
என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த பொழிந்த முருகை கற்களையும்,வெள்ளைக்கற்களையும் கொண்டு கட்டப்பட்ட கேணியையே ஆகும். யமுனாநதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.
 கோட்டைக்குரிய சுவர் அமைப்பு முறையிலே இவ்வேரியின் இறுதிவடிவம் ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இவ்வேரியிலுள்ள சேறுவாரி வெளியே எடுக்கப்பட்டபோது இலுப்பை மரத்தினால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய அம்மன் சிலை வெளிவந்தது. இவ் அம்மன் சிலையானது தற்போது யாழ் அரும்பொருளகத்தில் (அரும்பொருளகம் தற்போது உள்ள நிலை தொடர்பாக பின்னர் தனியே நோக்குவோம் ) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சங்கிலியன் தோப்பு மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகமொன்றினால் மந்திரிமனைக்கும் அந்த யமுனா ஏரிக்குமிடையே தரைக்குக் கீழாக அமைந்த சுரங்கப் பாதையொன்று புராதன காலத்தில் அமைந்திருந்தது என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. மந்திரிமனையின் பிற்சுவர் ஒன்றுடன் அவ்வாறமைந்த சுரங்கப்பாதையொன்றின் வாயில் மிக அண்மைக்காலம் வரைக்கும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வேரியைச் சுற்றி சில கட்டடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டி வேலைப்பாடுடைய சுண்ணாம்புச் சாந்தினால் ஆன தூண்கள் பழைய ஓடுகள்,பட்பாண்டங்கள் என்பன உறுதிப்படுத்துனின்றன.சிலர் இவ்விடத்தில் அரச மகளீர் குளிப்பதற்கான மண்டபங்கள் இருந்ததாகக் கருதுகின்றனர்.
"கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” என்னும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று  ஆதாரங்களை  பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.
யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது இந்த ”யமுனா ஏரி” தடாகம். புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.
யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளையோர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

அடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள "மந்திரிமனை".  இது ஓர் புராதன மாடி வீடு. பிரதான வாசலிலே அவ்வீடு பற்றி சாசனம் ஒன்று பழந்தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம். அதுவும் சிதைவடைந்தவாறேயுள்ளது.
முன்பு ஒரு முறை அங்கு ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்ததையும்  எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது . இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப்பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.
அதேபோல் யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள நுளைவாயில். சங்கிலியனின் தோப்பிற்கான வாயில்  இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள்.
இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இவை இன்று  திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றன.
இவற்றை பேணி பாதுகாக்க இன்றைய சூழலில், சமூக ஆர்வலர்கள், தொல்பொருள்துறை, மாநகரசபை என பலர் இருந்தும்  யார் முன்வருகிறார்கள்?