"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, January 7, 2011

பரமபிதாவும் காப்பாற்ற முடியாதவர்கள்


இன்று யாழில் எமது இளம்தலைமுறை தடம்மாறி பரம மண்டல பரமபிதாவும் காப்பாற்றமுடியாத திசையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. கலாச்சாரம் காணாமல் போகிறது. பண்பாடு பாழ்படுகிறது. நாகரிக மாற்றம் என்ற பெயரில் அநாகரீகத்தின் உச்சத்தை நோக்கி நகர்கிறது. முன்னைய காலத்தில் பெரியவர்களால் பொத்தி கட்டிக்காக்கப்பட்ட யாழ்ப்பாணக்கலாச்சாரம் இன்று சீரழிந்து போய்க்கொண்டிருக்கிறது. தற்போது இளைஞர், யுவதிகளிடையே காணப்படும் 
*கட்டுப்பாடற்ற சுதந்திரம், 
 *கட்டுபாடு இருந்தும் ஏமாற்றுகின்ற திறமை, 
  *அளவுக்கு மீறிய வசதிவாய்ப்புகள், 
   *கண்காணிப்பு இன்மை, 
    *பிள்ளைகள் மீதான பெற்றோரின் அதீத நம்பிக்கை போன்ற காரணங்கள் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன.
                                                               அதனால் காதல் என்றால் என்ன என்பதே புரியாதநிலையில்  எதிர்ப்பால் ஈர்ப்பினை காதலென அர்த்தம்கொண்டு சலீம்-அனார்கலி, ரோமியோ-ஜூலியட் கற்பனைகளில் சிறகைவிரித்து  தம்மை மறந்து சூழ்நிலைகளையும் மறந்து சீரழிந்து போகிறார்கள். கெடுவது அவர்கள் மட்டுமல்ல, காதலும்தான். இளைய தலைமுறையை நாளைய சிற்பிகள்  என்பார்கள். ஆனால் அவர்கள் இப்போதே செதுக்குகிறார்கள் எதையோ எல்லாம் SMSகளில். Onlineஇல் பாதி வாழ்க்கையையே வாழ்கிறார்கள். தமிழில் அழகாய் ஒன்று சொல்வார்கள், "பிஞ்சிலே பழுத்தது" என்று. அதுகூட இவர்களிற்கு பொருந்தாது. இவர்களெல்லாம் "பிஞ்சிலே வெம்பியவர்கள்".  
                                            தமிழ் பண்பாட்டிற்கே உரிய சிறப்பான அம்சம் "கற்பு". ஆனால் இன்று இது பலருக்கும் என்னவென்று தெரிவதில்லை. பல ஆண்களின் பார்வையில் இதன் அர்த்தமே வேறு. இது ஏதோ பெண்களிற்கு மட்டுமே பொருந்தும் ஒன்று, எமக்கல்ல என்ற போக்கு. இதன் விளைவே நிலைகெட்ட பயணம். பெண்களிலும் சிலர் தெரியவாபோகிறது என்ற துணிவில் நடக்கும்போது நல்லவொரு கூட்டணி அமைந்து வாழ்வே நாசமாய் போகிறது. கல்வி நிலையங்களிற்கு என்று கூறி வீட்டிலிருந்து புறப்பட்டு பேரூந்து நிலையத்து சீமெந்து இருக்கைகளில்  மணிக்கணக்கில் காத்திருந்து துணைகள் சேர்ந்து அவர்கள் கற்கும் பாடம் பெற்றோருக்கு தெரிவதில்லை. பலர் கல்வி நிலையங்களில் பிள்ளைகள் படித்த பாடங்களை ஒப்புக்கேனும் பார்ப்பதுமில்லை. அது அவர்களிற்கு பெற்றார் கொடுக்கும் சீரழிவுச்சலுகை. வீட்டிலிருந்து பார்க்கும் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் புரியுமளவிற்கு பிள்ளைகளின் நாடகங்கள் புரிவதில்லை. பல பெற்றார் நினைக்கலாம் எங்கள் பிள்ளைகள் ஒழுக்கமானவர்கள், அவர்கள் தவறமாட்டார்கள் என்று. உங்கள் பிள்ளைகள் நல்லவர்கள்தான். ஆனால் சூழல் நல்லதில்லை. பலவித நட்புகள் அவர்களிற்கு கிடைக்கின்றன. அவை உங்கள் பிள்ளைகளை எப்படியும் இயக்கும் என்பதை ஏனோ மறக்கிறீர்கள். வாழ்வில் பயணிக்க பலவழிகள் உள்ளன, ஆனால் சரியான வழிகள் சிலதான். ஏனைய வழிகளின் முடிவுகள் குழிகளும் பள்ளத்தாக்குகளுமே. இளம் வயதில் அவை தெரிவதில்லை. தெரியும்போது காலம் கடந்துவிடுகிறது. எல்லாமே முடிந்தும்விடுகிறது. 
                                   எமது தவறுகளிற்கு மற்றவர்களிலிருந்து காரணத்தை தேடுவதை விடுத்து எம்மிலேயே தேடினால் தீர்வுகள் இலகுவாய் கிடைக்கும். எமக்குத்தான் அந்த இயல்பே இல்லையே? இன்று வீட்டிற்கு வீடு வலைப்பின்னல் (இன்டர்நெட்) வசதிகளுடன் கணனிகள் உள்ளன. வெளிநாட்டு உறவுகளுடன் கதைப்பதற்கு, பிள்ளைகளின் கல்வி தேடல்களிற்கு, அறிவு வளர்ச்சிக்கு என விளக்கங்கள் வேறு கிடைக்கின்றன. ஆனாலும் பல பெற்றார் கணனியின் அருகிலேயே போவதில்லை. எமக்கு எதுவும் தெரியாது, பிள்ளைகள்தான் "எல்லாம் படித்தவர்கள், அவர்களே கையாளட்டும்" என்ற மனநிலையில், கணணிகளையும் அவர்களது அறையினுள்ளேயே கொடுத்தும் விடுகிறார்கள். ஆனால் அப்படியான ங்கள் நிலைப்பாடே அவர்கள் "பிஞ்சிலே வெம்புவதற்கும்" வாய்ப்பாக அமைந்துவிடுகிறது என்பதை அறிவதில்லை. இன்று பெரியவர்களே கணினியில் பல விடயங்களை தேடும்போது, Filter வசதி உள்ள கணினிகளிலேயே 18+ விடயங்கள் தடக்குவதை கண்டிருப்பீர்கள். இவை இளையோருக்கும் தட்டுப்படும்போது கல்வி காற்றிலே பறக்க "ஆய்வுகள்" ஆரம்பிக்கின்றன. கல்வி கசக்கும்போது ஆய்வுகள் இனிக்கின்றன. தொடர தூண்டுகின்றன.  பாலியல் சீர்கேடும் போதை பாவனையும் பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் வேரூன்றியுள்ளது வேதனையானதே.  இப்போதெல்லாம் கல்விநிலைய  வெளிப்புறத்தில் உந்துருளிகளை (Motor Bike)  வைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுடன் கல்விநிலையம் முடிந்ததும் மாணவிகளை அவர்களின் உந்துருளிகளில் ஏற்றிச் செல்கிறார்கள். இதை நாமே எத்தனை முறை நேரடியாக பார்த்துள்ளோம்.
   அடுத்த வாய்ப்பு GPRS வசதியுள்ள செல்லிடப்பேசிகளை கொடுப்பது. செல்லிடப்பேசியே தேவையில்லாத வயதிலும் ஏனோ அவற்றை கொடுத்து பெருமை கொள்கிறார்கள். அவசியம் தேவை என்றாலும் நவீன GPRS வசதியுள்ள செல்லிடப்பேசிகளை கொடுப்பது தேவையற்றது என்பதையும் உணர்வதில்லை. சிம்மையும் அடிக்கடி மாற்றுகிறார்கள், அதேபோல் துணைகளையும் அடிக்கடி மாற்றுகிறார்கள். Miss Call அடிப்பதிலேயே வாழ்வையும் Miss பண்ணிவிடுகிறார்கள்.  பலரது திருவிளையாடல்கள் வெளியே வரவும் அந்த நவீன வசதிகளுள்ள செல்லிடப்பேசிகளே காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. விளைவுகள் நீதிமன்று, தற்கொலை, இளவயது கர்ப்பம், கருச்சிதைவு என பல வகைகளில் கிடைக்கின்றன. அப்போதும்கூட பெற்றோருக்கு தம்தவறு புரியாமல்போவதுதான் ஆச்சரியம்.
                        வெளிநாட்டு உறவுகள் பனிக்குளிர் பாராமல் தேடுகின்ற பணம் இங்கு இப்படியான தேவைகளிற்கும் பயன்படுகிறது. பணத்தின் பெறுமதியும் அதன் மீதான மதிப்பும் சுயமாக உழைப்பவர்களிற்குத்தான் தெரியும்  என்பதை நிரூபிக்கிறார்கள். வெளி ஆடம்பரத்திற்காக வீணாக்குகிறார்கள். அழகு என்றெண்ணி  அலங்கோலமாய் திரிகிறார்கள். 
                             பெண்கள் கூந்தலை விரித்து வெட்டி சுருட்டிவிட ஆண்கள் வளர்த்து கற்றையாக கட்டிவிட என்று (அ)நாகரீகம் கொடிகட்டி பறக்கிறது. முடி வெட்டினாலும் கோழிக்கு கொண்டை வைத்ததுபோல் ஒரு வெட்டு. அதற்கு நிறம் நிறமாய் சாயம் வேறு. ஆடைகளின் அலங்காரம் சொல்லவே தேவையில்லை. எதற்காக அணிகிறார்கள் என்பதும் புரியவில்லை. சிறுவயது ஆடைகளை கவனமாக வைத்து பயன்படுத்துகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்களின் அர்த்தம் அவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ புரிபவர்களை நெளியவைக்கிறது. சிறுவயதில் பாவாடை,சட்டை. பருவமடைந்தபின் தாவணி,சேலை என்பதெல்லாம்  கதைகளில் வருகிறது, நிஜத்தில் இல்லை. இப்போ அணியப்படும் உடைகளின் பெயர்கள் இலகுவில் சொல்ல முடிவதுமில்லை. ஆண்கள் சிலருக்கு சட்டை பொத்தானின்  பயன் தெரிவதில்லை. அதனால் அவற்றை பூட்டி நேரத்தை வீணாக்குவதில்லை. வீசும் தென்றல் மார்பில் தவழ விட்டுவிடுகிறார்கள். அதற்கு நாகரீகம் என்று அர்த்தமும் சொல்கிறார்கள். மதுபானங்களிலும் நீந்துகிறார்கள். புகையில் மிதக்கிறார்கள். போதையில் இவர்களின் செயற்பாடுகள் பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கின்றன.

                                 முன்பு எனது "சுமப்பவளே, என்னை சிதைக்காதே" என்ற பதிவில் எழுதிய வரிகள் "அவனுக்கு அது ஒரு சம்பவம், அன்றுடன் சரி.
உனக்கு அது ஆயுள் முழுவதும் வலி, என்னை அழித்தால்கூட நினைக்கும்போதெல்லாம் உறுத்தும்". இதனை பெண்கள் புரிந்துகொள்ளும்போது தவறுகள் தடுக்கப்படும். அதற்காக நான் ஆண்கள் எதுவும் செய்யலாம் என்று கூறவரவில்லை, உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதைத்தான் கூறுகிறேன். முள் சேலைமீது பட்டாலும், சேலை முள்மீது பட்டாலும் சேதம் முள்ளுக்கு அல்ல, சேலைக்குத்தான்.
                               இன்று சுற்றுலா மையம் என்று அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்களே சீர்கேடுகளுக்கும் மையமாக இருப்பது பலரும் அறிந்தததே. அங்கு வேண்டத்தகாத ஆபாசமான செயல்கள் அரங்கேறுவதாகவும் குடும்பத்துடன் கடற்கரைக்குச்சென்று  காற்று வாங்க காலார நடந்து செல்ல முடியவில்லை என பலரும் கூறுகின்றனர். ஆனால் தங்கள் பிள்ளைகளும் தமக்கு தெரியாமல் அங்கு செல்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. சிலவிடுதிகளில் மணித்தியால அளவுகளில் அறைகள் வாடகைக்கு விடப்படுவதாகவும் நாளேடுகளில் எழுதப்படுகிறது. பாடசாலை மாணவிகளிடம் கருத்தடை மாத்திரைகள் பரிமாறபடுவதாகவும் கூறப்படுகிறது. 
               இனிவரும் காலங்களில் பெற்றார் பிளைகளிற்கு மனம் முடிக்கும்போது (அதுவரை பிள்ளைகள் பொறுமையாக இருந்தால்) கிரகநிலைகளின் கூற்றை பார்க்கிறார்களோ இல்லையோ, அண்மையில் எடுத்த மணமக்களின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் காலம் தொலாவ்வில் இல்லை.
                    கண்கெட்டபின் சூரியனை வணங்க நினைப்பதில் பயனில்லை, வெள்ளம் மேவியபின் தடுப்பணை போடவும் முடியாது. தவறுகள் தெரிகின்றபோதும் யார் இவற்றை தடுப்பது? யார் கண்காணிப்பது? என்பதுதான் தெரியவுமில்லை, புரியவுமில்லை. பேணிவளர்த்த எம் பண்பாட்டை  மறந்தது சீர்கெட்டு போவதை பார்க்க வேதனையில் மனம் விம்முகிறது. இளமையின் உணர்வுகளை புதைத்துவிட்டு வாழ்ந்தவர்கள் இருந்த மண்ணில் இன்று சீர்கெட்டு நடப்பவரை பார்க்க இதயத்தில் ஒரு வலி தெரிகிறது. என்ன செய்வது? எம்மால் முடிந்ததது அதுதானே?   
  







This free script provided by
JavaScript Kit

2 comments:

  1. unmaithaan.sagotharaa..arumaiyyaan aazhndha karuthukkal...

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி...

    ReplyDelete