இன்று எருக்கலை வளர்ந்த நிலம் - இது
அன்று அழகிய பூச்செடிகள் அலங்கரிக்க
நின்று நிரைநிரையாய் எம்பிள்ளைகள் மீளாத்துயில்
கொண்ட இடம்,
ஆண்ட பரம்பரையின் ஆலயம் நிமிர்ந்து
நின்ற இடம்,
சென்ற மக்களெல்லாம் நின்று வணங்கி
சென்ற இடம்,
இன்று ஓர் இளம் அன்னை அந்த வீதியால் போகும்போது தன் பிள்ளைக்கு கூறுகிறாள்,
"உன் அப்பா அந்த எருக்கலைக்கு கீழேதான் உறங்குகிறார், உன் மாமா, மாமி, சித்தி எல்லாருமே அருகருகாய்த்தான் உறங்குகிறார்கள், நீ போய்விளையாடுற பக்கத்துவீட்டு நிலவனின்ர அம்மாகூட இங்கதான் உறங்குறா"
மழலை மாறாத சிறுவன் கேட்டான்,
"அதாலதானாம்மா, அப்பம்மா இங்கயிருந்து மண் அள்ளிக்கொண்டுவந்துவச்சு கும்பிடுறவ?"
"ஓமப்பன், அப்பா மட்டுமில்ல.. அப்பம்மாவின்ர அடுத்த மகனும், அதுதான் உன் சித்தப்பவும்கூட இங்க உறங்குறார்"
"அம்மா, அவையள் உறங்கிற இடமெல்லாம் ஏன் பத்தையாய் கிடக்கு? மேல கல்லெல்லாம் கிடக்கு, அதை துப்பரவாக்குவமாம்மா?"
தாய், மனதில் நீங்கா ஏக்கத்துடன்.....
"அந்த கல்லெல்லாம் உன் அப்பாவுக்கு கட்டின கோயிலிண்ட அத்திவார கல்லுகள், நீ கருவாய் இருக்கேக்க இங்க அப்பாவுக்கு விளக்கேற்றி கும்பிட்டனான், பிறகு எல்லாமே மாறிப்போச்சு, கோயிலெல்லாம் இடிச்சுபோட்டாங்கள், இப்ப வேண்டாமப்பன், உன் அப்பா மாதிரியே நீயும் வளர்ந்து பெரியாளாகி அதுக்குப்பிறகு துப்பரவாக்குவம்"
தாய்க்கு எதுவும் செய்யமுடியாத நிலை,
அவளே அந்த எருக்கலை பூவில்தான் தன் கணவனின் புன்னகையை காண்கிறாள்.
எருக்கலை காய்த்து வெடித்துப்பறக்கும் பஞ்சுகளில்
அவர்களின் நிறைவேறாத ஏக்கங்கள் காற்றுடன் கலக்கின்றன,
அதை அவள் மானசீகமாக உணர்கிறாள்.
மனதில் பாரம் அழுத்துகிறது, பெருமூச்சு அனலாக வெளிப்படுகிறது, அவளால் இப்போ முடிந்தது அது மட்டும்தான்,
அந்த பிஞ்சு முகத்தில் ஆயிரம் கனவுகள்,
தான் வளர்ந்து அந்த எருக்கலை வளர்ந்த நிலத்தை துப்புரவாக்கி தன் உறவுகளிற்கு ஆலயம் கட்டும் ஆர்வம்.
தினம் தினம் அவ்வீதியால் போகும்போதெல்லாம் ஏக்கத்துடனேயே பார்க்கிறான்,
அவனது தந்தை உறங்குமிடத்தை...
அவனது உறவுகள் துயில்கொள்ளுமிடத்தை...
நிலவனின் தாய் மீளாத்துயில்கொள்ளுமிடத்தை...
அந்த எருக்கலை வளர்ந்த நிலத்தை...
This free script provided by
JavaScript Kit
JavaScript Kit
No comments:
Post a Comment