"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, January 22, 2011

என்னவொரு உயர்வான கௌரவம்?


சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். 

வாழ்க்கை வரலாறு 

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 

13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். 

அரசியல் சேவை 

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். 

சமூக சேவை 

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. 

சமய சேவை 

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். 

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். 

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். 

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். 

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
அரசியலில் இவர் பணிகள்
 
இத்தீவின் சுதந்திரத்தை பிரித்தானிய காலனிய ஆட்சியாளரிடம் ஒரே குரலில் வலியுறுத்திக்கோரும் பொருட்டாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைபில்தானே ஆட்புல பிரதிநிதித்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தமையால் யாழ்ப்பாண மகாசபையின் தலைவர்களான சபாபதியும் கனகசபையும் ஆட்சேபித்து அதில் கையெழுத்திட மறுத்திருந்தார்கள். ஒற்றையாட்சி நிலவும் நிலையில் ஆட்புலப் பிரதிநிதித்துவம் தமிழ் மக்களை எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாற்றிவிடும் என்பதே அவர்களது ஆட்சேபனைக்குக் காரணமாக இருந்திருத்தல் வேண்டும்.
தீவிலுள்ள அனைத்து அமைப்புகளையும் இணைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவ முற்பட்டிருந்த சிங்களத் தலைவர்கள் பீரிஸும் சமரவிக்ரமவும் சபாபதியையும் கனகசபையையும் சம்பந்தப்பட்ட வரைபுத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற இணங்க வைப்பதற்கு உதவும் பொருட்டு பொன்.அருணாசலத்தின் உதவியை நாடியிருந்தார்கள்.

ஆட்புல பிரதிநிதித்துவம் வலியுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வரைபுத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறுவதற்கு பொன். அருணாச்சலம் உதவி புரிந்தால் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதற்கு நாம் தடையாக இருக்கப்போவதில்லையென்றும் கொழும்பு வாழ் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கத் தாம் உதவுவதாகவும் பொன்.அருணாச்சலத்திற்கு வாக்குறுதியும் தந்திருந்தார்கள் அவர்கள் இருவரும்.

மேற்படி வாக்குறுதியை நம்பியவராக சேர்.பொன்.அருணாச்சலம் அளித்த பரிந்துரையின்படியே யாழ்ப்பாண மகாசபை அதனது ஆட்சேபனையைக் கைவிட்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பை நிறுவும் வரைபுப் பிரேரணைத் தீர்மானமாக நிறைவேறுவதற்கு உதவியிருந்தது. சேர்.பொன்.அருணாச்சலம் இலங்கைத் தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கைத் தேசிய காங்கிரஸின் முதல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் தமது மூத்த சகோதரர் சேர்.பொன்.இராமநாதனிடம் ஆசி பெறுவதற்கு சேர்.பொன்.அருணாச்சலம் சென்றபோது "தம்பி கவனம் நீதி கதிரையோடு தூக்கி வெளியே வீசப்படுவாய்' என்றே சேர்.பொன். இராமநாதன் தமது இளையவனை எச்சரித்திருந்தார். அவரது சொந்த அனுபவம் சேர்.பொன்.இராமநாதனை அங்ஙனம் பேச வைத்திருந்தது. குதிரைகளுக்குப் பதிலாக தம்மைத் தேரில் இருத்தித்தாமே இழுத்துச் சென்றிருந்த சிங்களத் தலைமை பின் எங்ஙனம் மாறியிருந்தது என்பதையும் தமது ஞாபகார்த்தமாகச் செய்யப்பட்ட உருவச் சிலையையே நிறுவ முன்வராது அரட்டை செய்யப் போகிறது என்பதையும் சேர்.பொன்.இராமநாதனின் முன்னுணர்வு அவரை விழிப்புறச் செய்திருந்தது.

சேர்.பொன்.இராமநாதன் வாக்குப் பொய்க்கவில்லை. வதிவிட தகுதியின் நிமித்தம் தலைநகர் கொழும்பில் வாழ்ந்து வந்த சேர்.பொன்.அருணாச்சலம் கொழும்பில் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். அதனைத் தடுக்கும் பொருட்டுத் தாமே தலைநகர் கொழும்பில் வேட்பாளராகத் தேர்தலில் நிற்கப்போவதாக பீரிஸ் அறிவித்திருந்தார்.

அதனை எதிர்கொள்ளும் பொருட்டு சிங்களத் தலைமையால் தமக்கு வாக்களிக்கப்பட்ட கொழும்புத் தமிழர்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை சேர்.பொன்.அருணாச்சலம் ஆளுநரிடம் வலியுறுத்தத் தலைப்பட்டார். ஆளுநர் அதற்கு இணங்கிவிடுவார் எனப் பயந்த சிங்களத் தலைமைக் காலனிகளின் செயலாளரிடம் அதற்கு எதிராகப் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. சிங்களத் தலைமையால் முன்வைக்கப்பட்ட வாதம்

தமிழர்கள் இத்தீவின் ஏனைய சிறுபான்மையினரைப் போன்ற ஒரு சமூகம் அல்ல.

அவர்களும் சிங்களவர்களைப் போன்று ஒரு பெரும்பான்மையினரே. ஆதலால் அவர்களுக்கு விசேட பிரதிநிதித்துவம் வேண்டியதில்லை என்பதே .

ஆகவே காயுமற்ற கறியுமற்ற நிலைக்கு என் சமூகம் தள்ளப்படுதலே தேசியம் எனில் எனக்கு அத்தேசியம் வேண்டாம் எனத் தெரிவித்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் உறுப்புரிமையைத் துறந்த சேர்.பொன்.அருணாச்சலம் தமிழர் தேசிய மகாசபையை நிறுவியிருந்தார். அவரால் முன்வைக்கப்பட்டதே தமிழீழக் கோரிக்கை. தமது இலட்சியக் கோரிக்கையை எய்து முன்பே அவர் காலமானமை தமிழரின் துர்ப்பாக்கியமே!

அவரது மூத்த சகோதரர் சேர்.பொன்.இராமநாதனோ,ஒற்றையாட்சி நிலவும் இத்தீவில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுதலை ஆட்சேபித்தார். காரணம் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக சிறுபான்மையினராக மாற்றப்படுவர் என்பதனாலேயே. இதனால் சர்வஜன வாக்குரிமையை டொனமூர் விசாரணைக் குழுவினர் பரிந்துரைத்ததும் டொனமூர் எனில் இனித் தமிழர் இல்லை என்பதே அர்த்தமாம் என உணர்ந்து அத்துடன், அரசியல் பொதுவாழ்வில் இருந்தே ஒதுங்கிக் கொண்டார் சேர்.பொன். இராமநாதன்.

ஆயினும் சட்ட நிர்ணய சபையோ ஒரேயொரு வாக்கினை மட்டும் பெரும்பான்மையாகப் பெற்றே நிறைவேற்றியிருந்தது. அது சட்டமாக நிறைவேறுவதற்கு உதவியிருந்தவர் மட்டக்களப்புப் பிரதிநிதி தம்பிமுத்துதான். வெகுவிரைவில் ஊழல் குற்றச்சாட்டின்கீழ் தம்பிமுத்துவின் பிரதிநிதித்துவப் பதவியே பறிக்கப்பட்டது.

காயுமற்ற கறியுமற்ற சாம்பார் நிலைக்கு எனது இனம் தள்ளப்படுதலே தேசியமெனில் அத்தேசியத்தை யான் வேண்டேன் என உரைத்து இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிலிருந்து வெளியேறியவராக

சேர்.பொன்.அருணாச்சலம் தமிழர் தேசியப் பேரவையை நிறுவியிருந்தபோதும் அவர் பெற்ற புதல்வர் எஸ்.சி.மகாதேவாவே தமது தந்தை சொல்வாக்கை மந்திரமாக எடுத்துக்கொள்ளாது தமது தந்தையாரால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்த அதே தேசியத்தில் இரண்டறக் கலந்து உள்நாட்டு அமைச்சராகவும் வந்திருந்தார்.

இத்தீவுக்கு சர்வஜன வாக்குரிமை பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒற்றையாட்சி நிலவும் தேசத்தில் எண்ணிக்கையில் குறைந்த தமிழ் மக்களைப் பெரிதும் பாதிப்பதாக அவர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடுமென்ற காரணத்தினால் சேர்.பொன்.இராமநாதன் டொனமூர் எனில் இனித் தமிழர் இல்லையென்பதே அர்த்தம் என்று சொல்லியே தமது அரசியல் பொதுவாழ்வினைத் துறந்திருந்தார். அதற்கு விரோதமாக அவரது மருமகன் சு.நடேசபிள்ளையோ அரசியல் பொதுவாழ்வில் தாம் நுழைந்து கொண்டதுடன், இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கு எதிராக டி.எஸ்.சேனநாயக்கா ஓர் அரசியல் கட்சியை நிறுவுவதற்கு அவருடன் ஒத்துழைப்பு நல்கியிருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி எனும் பெயரை அதற்கு முன்மொழிந்தவரும் நடேசபிள்ளையே. வரலாறு கற்றுத்தந்த பாடத்தால் படிப்பினை பெறுவதற்குத் தவறிய சு.நடேசபிள்ளை அதன் நிமித்தம் கண்ணீர் சிந்த நேர்ந்த வரலாற்றைப் பின்னர் காண்போம்.

டொனமூர் விசாரணைக் குழுவினரையடுத்து சோல்பரி ஆணைக்குழு இந்நாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பிரித்தானிய காலனி ஆட்சியாளரினால் ஆட்புல பிரதிநிதித்துவத்தால் தமிழுக்குச் சம்பவிக்கவிருந்த கேட்டை சேர்.பொன்.அருணாச்சலமும் சர்வஜன வாக்குரிமை பரிந்துரைக்கப்பட்டதால் சம்பவிக்கவிருந்த அனர்த்தத்தை சேர்.பொன்.இராமநாதனும் சுட்டியிருந்தமையை பார்த்தோம். இவர்களது வழியில் ஜி.ஜி.பொன்னம்பலம் சோல்பரி ஆணைக்குழுவினர் முன்பாகத் தோன்றி சமபல பிரதிநிதித்துவத்துக்காக ஏறத்தாழ ஒன்பது மணிநேரம் தொடர்ச்சியாக வாதாடியிருந்தார். பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதாகவிருந்தால் இத்தீவின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவம் தரப்படுதல் வேண்டுமென்பதே சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையின் அர்த்தமாகவிருந்தது.சிங்களவர் இதனை ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையென வர்ணித்திருந்தனர். எந்தவொரு சமூகமும் ஐம்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடாது என்பதே அவருடைய வாதமாக இருந்தது. இத்தீவின் சகல சிறுபான்மை மக்களும் கூட்டாக சிங்களப் பெரும்பான்மை மக்களுக்குச் சமனான சமபல பிரதிநிதித்துவம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதே சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையின்சாரமாகவிருந்தது. சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவமெனில் தமிழருக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவம் தரப்படுதல் வேண்டும் என்பது அதன் அர்த்தமாக ஒரு போதுமே இருந்திருந்ததில்லை.

ஆயினும் நியாயமான இந்தச்சமபல பிரதிநிதித்துவக் கோரிக்கையை நிராகரித்து ஓர் ஒற்றையாட்சி அரசியலமைப்பை சோல்பரி ஆணைக்குழுவினர் பரிந்துரைத்திருந்தமையை பிரித்தானிய காலனிச் செயலாளர் முன்சென்று ஆட்சேபிக்கும் பொருட்டு சட்டசபை உறுப்பினர் ராஜகுலத்தையும் உடன் அழைத்துக் கொண்டு சீமைக்குப் புறப்பட்டார். ஜீ.ஜீ. பொன்னம்பலம் எது எவ்வாறிருப்பினும் சோல்பரி ஆணைக்குழுவினது அறிக்கை மீது இலங்கை சட்டசபை எடுக்கப் போகும் தீர்மானத்துக்குக் காத்திருக்கும் படி அங்கு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட விடயம் சட்ட சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு விடப்படும் போது தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரையும் கூட்டாக அதனை நிராகரிப்பதாக வாக்களிக்கும் படி அவர்களை வற்புறுத்திக்கேட்டுக் கொள்ளும் பொருட்டு ராஜகுலத்தை அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் இலங்கைக்கே திருப்பி அனுப்பியிருந்தார்.

ஆயினும் இலங்கை வந்தடைந்த ராஜகுலம் ஒரு பொது வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சமயம் அவர் செவிகளில் கேட்கும் படியாக டி.எஸ்.சேனநாயக்க, சேர் மொலேமுரேயிடம் "அதோ வருகிறார் எங்கள் அடுத்த தொழில் அமைச்சர்' எனத் தெரிவித்துள்ளார். அக்கூற்றை உண்மையென வி
ங்கிக் கொண்ட ராஜகுலம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தம்மிடம்சொல்லி அனுப்பியிருந்தத்ற்கு விரோதமாக ஏனைய தமிழ் உறுப்பினர்கள் அனைவருடனும் கூட்டாக இணைந்து சோல்பரி ஆணைக்குழுவினது அறிக்கை பரிந்துரைத்திருந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினை ஏற்றுக் கொள்வதற்கு சாதகமாகவே வாக்களித்திருந்தார். டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையோ ஒரே ஒரு தமிழ் துரோகியாகிய தம்பிமுத்துவின் வாக்கினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. தெரிந்ததே. அதற்கான பிரேரணை தனியொரு வாக்கினை மட்டுமே பெரும்பான்மையாகப் பெற்றிருந்தது. ஆயின் சோல்பரி ஒற்றையாட்சி அரசியலமைப்போ அதற்கு முற்றிலும் மாறாக சட்டசபையில் இருந்த அனைத்துத் தமிழ் உறுப்பினர்களுடைய வாக்குகளை பெற்று அச்சமயம் சபையில் அவர்கள் பிரசன்னமாக இருந்திராமை காரணமாக ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஒரேயொரு வாக்கு மட்டுமே புறநீங்கலாகவிருக்க அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

தம்பிமுத்து தமிழுக்கு இழைத்த துரோகத்திற்கு விதி அவரைத் தண்டிருந்திருந்தது. விரைவிலேயே ஊழல் குற்றச்சாட்டு நிமித்தம் தமது சட்டநிர்ணயசபை உறுப்புரிமை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. எந்த சோல்பரி ஒற்றையாட்சி அரசியலமைப்பினை அங்கீகரிப்பதாக சட்டசபையில் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக வாக்களித்திருந்தார்களோ அதே பரிந்துரையின் நடைமுறைப்படுத்தலால் எதிர்வருவதற்கு இருந்த முதல் பாராளுமன்றத் தேர்தலிலேயே சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அனைவரையும் தோற்கடிக்கும் பொருட்டாக 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அவர்களுக்கு எதிராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. கல்குடாவில் போட்டியிருந்த வி.நல்லையா ஒருவர் புறநீங்கலாக சம்பந்தப்பட்ட எஸ்.சி.மகாதேவா, பு.நடேசபிள்ளை உள்ளடங்க அனைவரும் அத்தேர்தலில் படு தோல்வியடைந்தனர்.

கல்குடாவில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டிராமையே நல்லையாவின் வெற்றிக்குக் காரணமெனலாம். ஆயினும் 1952 தேர்தலையடுத்து தபால் அமைச்சராக வந்திருந்த வி.நல்லையாவும் ஒரு பெண் விடயத்தால் அவமானப்படுத்தப்பட்டே அவரும் தம்பிமுத்துவைப் போன்றே பதவி அவரிடம் இருந்தும் பறிக்கப்பட்டிருந்தது. அவரது மந்திரப் பதவி.

1947 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழு உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சமபல பிரதிநிதித்துவமே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையும் அதன் அடிப்படைக் கொள்கையுமாகும். இருந்த போதிலும் அக்கட்சியின் அடிப்படைக் குறிக்கோளுக்கே விரோதமாக தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சரிபாதியாகக் குறைக்கும் பொருட்டு 1948 டிசம்பர் திங்களில் பிரஜாவுரிமைச் சட்டத்தைப் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்தது. சமபல பிரதிநிதித்துவமே அதன் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த அகில இலங்கைத் தமிழ்க் கட்சியின் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழுபேரும் சம்பந்தப்பட்ட பிரஜாவுரிமை மசோத பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சமயம் சனப்பிரதிநிதிகள் சபையில் சமூகமாகவிருந்து மசோவிதற்கு எதிராகச் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏழுபேரும் கடுமையாக வாதிட்டு அதற்கு எதிராக அத்தனை பேரும் கூட்டாக எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டாமா?

கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு விரோதமான தமிழ்பேசும் மக்களில் சரி பாதித்தொகையினரது பிரஜாவுரிமையைப் பறித்து வாக்குரிமையற்றவர்களாக அம்மக்களை மாற்றிய அம்மசோதா சனப்பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியோ வெறுமனே அம்மசோதாவிற்கு ஓர் அடையாள எதிர்ப்பினை மட்டுமே தெரிவித்திருந்தது. ஒதண்t ச் tச்டுஞுண ணிஞடீஞுஞிtடிணிண தீச்ண் ணூச்டிண்ஞுஞீ ஞதூtடஞு tச்ட்டிடூ ஞிச்ணஞ்ணூஞுண்ண் ணீச்ணூtதூ இதனைத்தான் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சர்பில் அம்மசோதாவை எதிர்த்து ஜி.ஜி.பொன்னம்பலமும் தந்தை செல்வநாயகமும் வாக்களித்திருந்தார்கள் என்று 1974 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தில் அ.அமிர்தலிங்கத்தினாலும் பின்னர் குறிப்பிட முடிந்தது.

அதாவது சனப்பிரதிநிதிகள் சபையில் ஏழு பிரதிநிதிகளை உடையதாகவிருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அதனது முழுப்பலத்துடன் சம்பந்தப்பட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்திராது சம்பந்தப்பட்ட மசோதா சட்டமாவதற்கு உடன்பாடான ஓர் இணக்கமான ஒத்துழைப்பினையே நல்கியிருந்தது. ஆகவே, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலமும் தந்தை

செல்வநாயகமும் சம்பந்தப்பட்ட மசோதாவை எதிர்த்து வாதிட்டு எதிர்த்து வாக்களிக்கவும் செய்திருந்தபோதும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களான ஏனைய ஐவரும் அச்சமயம் சபையில் பிரசன்னமாகவிருப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தனர் கட்சித் தலைமையின் கட்டளைப்படி. எனவேதான் அது விடயத்தில் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. சபையில் அன்று பிரசன்னமாகவிருந்த கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கு.வன்னியசிங்கத்தை அணுகிய கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் இருவர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதாக பிரதமருக்கு அளித்த வாக்குறுதிப்படி ஒன்றில் வன்னியசிங்கம் சபையில் இருந்து வெளியே வேண்டும் அல்லது தாமே வெளியேறப்போவதாகச் சொல்லியே வன்னியசிங்கத்தையே சபையில் இருந்து வெளியேற்றியிருந்தமை இதனை உறுதிப்படுத்துகின்றது. ஓர் இணக்கமான ஒத்துழைப்பின் ஆதாரத்திலேயே அதனையடுத்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசில் சேர்ந்து ஒரு முழு மந்திரிப் பதவியும் ஓர் அரை மந்திரிப் பதவியும் பெற்றுக்கொண்டிருந்ததும் வரலாறு.

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆசியுடன்தான் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை நல்கும் இலங்கைப் பிரஜாவுரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் கூற்றிலும் உண்மை இருப்பதாகச் சொல்ல முடியாது. காரணம் வைபவமுறைப்படி ஜவஹர்லால் நேருவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த இலங்கை இந்திய காங்கிரஸ் அவ்வாறிருப்பின் அச்சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தின் முன்பாக நீண்டதொரு சத்தியாக்கிரகத்தை நடத்தியிருக்குமா? இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அதனைக் கண்டியாதிருந்திருப்பாரா?

முப்பது வருடங்கள் தந்தை செல்வா வழியில் அறவழிப் போராட்டங்களாலும் முப்பது வருடங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தினாலும் பெற முடியாத தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஓர் இணக்கமான ஒத்துழைப்பின் மூலம் பெறும் ஓர் எத்தனமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 2011 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களியாது தவிர்ப்பதற்காக வாக்களிப்பில் இருந்து விலகியிருந்துள்ளார்கள். வரலாற்றால் பாடம் படியாதவர்களுக்கு திரும்பவும் திரும்பவும் அதே படிப்பினைகளையே வரலாறு புகட்டுமெனும் உண்மையை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகின்றனரோ?
மூலம்: தினக்குரல் - தை 04, 2011
                  இதெல்லாம்  அனைவரும் அறிந்த விடயங்கள். நான் பதியவந்ததும் அவரது பழைய கதைகளையல்ல. இன்று யாழில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கண்ட ஒரு வேதனையான காட்சியையே. அந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே முன்பு சேர் பொன் இராமநாதன் அவர்களது சிலை நிறுவப்பட்டிருந்தது. பின்பு போர்ச்சூழலில் சிதிலமடைந்த சிலை கவனிப்பாரற்று கிடந்ததது. அருகில் நீதி மன்று கட்டப்பட்டபோதும் துரையப்பா விளையாட்டரங்கு புனரமைக்கப்பட்டபோதும் இச்சிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. சில நூறு மீற்றர் தூரத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபி உள்ளது. புனரமைத்து இடையிடையே பராமரிப்பு என்ற பெயரில் புல் வெட்டி சீராக்கும்போதும்கூட ஏனோ யாரும் இச்சிலையை பார்ப்பதில்லை. ஒருவேளை சேர் பொன் இராமநாதன் அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் தொடங்காததால்தான் இந்நிலைபோலும். என்னசெய்வது? அவருக்கு அந்நேரம் அது புரியவில்லை.
                                   தற்போது   அவ்விடத்தில் கண்காட்சி நடைபெறும்போதும் சிலையை புனரமைக்க எவரும் முன்வரவில்லை. மாறாக உடைந்த சிலையின் கழுத்துப்பகுதி கம்பியில் மின் இணைப்பு கம்பிகள் சுற்றப்பட்டு கம்பமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓர் அறிஞரின் சிலைக்கு இன்று கொடுக்கப்பட்டுள்ள மரியாதை இது. 
வரலாற்றை மறந்து ஒரு தமிழ் அறிஞரின் சிலையினை அவமதித்து, அதே சிலையில் மின்னிணைப்பு கம்பிகளை சுற்றி ஒரு கண்காட்சி தேவையா?  
ன்னவொரு உயர்வான கௌரவம்? 
எப்போமாறும் இந்நிலை?   






No comments:

Post a Comment